காஸ்ட்லியான விவாகரத்து வழக்கு... மனைவிக்கு ரூ.17,000 கோடி சொத்துப்பங்கீடு வழங்க தென்கொரியா நீதிமன்றம் உத்தரவு!
தென் கொரியாவின் முன்னணி கேமிங் நிறுவனத்தின் நிறுவனர் தனது மனைவியுடன் ஏற்பட்ட விவாகரத்து வழக்கில், நாட்டின் வரலாற்றிலேயே மிகக் அதிகமான தொகையைச் சொத்துப்பங்கீடாக வழங்கச் சியோல் குடும்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென் கொரியாவின் பிரபல ‘ஸ்மைல்கேட்’ கேமிங் நிறுவனத்தின் உரிமையாளரான குவான் ஹியுக்-பின் என்பவருக்கும், அவரது மனைவி லீ ஹ்வா-ஜின் என்பவருக்கும் கடந்த 2001-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, லீ கடந்த 2022-ம் ஆண்டு விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார்.

சுமார் 4 ஆண்டுகள் நீடித்த இந்த வழக்கின் முடிவில், குவான் தனது நிறுவனத்தின் 35 சதவீதப் பங்குகளை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.15,000 கோடிக்கு மேல்) தனது மனைவிக்கு உடனடியாக மாற்ற வேண்டும் என்றும், கூடுதலாக ரூ.461 கோடிக்கு மேல் ரொக்கமாக வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய மதிப்பில் சுமார் ரூ.17,000 கோடிக்கும் அதிகமான தொகை செட்டில்மென்ட்டாக வழங்கப்படவுள்ளது.
நிறுவனம் தொடங்கப்பட்ட ஆரம்பக் காலத்தில் லீ நிதி ரீதியாகவும், அதன் நிர்வாகத்தில் தலைமை செயல் அதிகாரியாகவும் ஆற்றிய பங்களிப்பு நிறுவனத்தின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருந்தது என்பதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. மேலும், குடும்பப் பராமரிப்பு மற்றும் குழந்தைகளை வளர்ப்பதிலும் அவரது நீண்டகாலப் பங்களிப்பு இருந்ததால் இந்தச் சொத்துப்பங்கீடு நியாயமானது எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
இதற்கு முன்பு தென் கொரியாவின் எஸ்கே குரூப் தலைவர் சே டே-வோன் வழக்கில் வழங்கப்பட்ட விவாகரத்து செட்டில்மென்ட்டே இதுவரை மிகப்பெரியதாக இருந்தது. தற்போது அந்தப் பழைய சாதனையை இந்தத் தீர்ப்பு இரண்டு மடங்கு அதிகமாக முறியடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
