தூத்துக்குடியில் அதிர்ச்சி - இறைச்சிக்காகப் பூனைகள் கடத்தல்... முயல் கறி எனக் கூறி விற்பனை!

 
பூனை முயல்

தூத்துக்குடி பகுதியில் வீடுகள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் திரியும் நாட்டுப் பூனைகளைப் பைக்கில் வந்து கடத்திச் சென்று, உணவகங்களில் முயல் கறி என்ற பெயரில் விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள புகார் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் உள்ள பூபாலராயர்புரம், திரேஸ்புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் பைக்கில் வந்து சுற்றிவரியும் கும்பல் ஒன்று, வீடுகள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் மீன் கழிவுகளைத் தின்று கொழுத்துத் திரியும் நாட்டுப் பூனைகளைக் காயப்படுத்திச் சாக்குப்பைகளில் அடைத்துக் கடத்திச் செல்வது வாடிக்கையாகியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட பூனைகள் இவ்வாறு இறைச்சிக்காகப் பிடிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் வளர்க்கப்படும் பிரியமான செல்லப் பூனைகள் மற்றும் நாட்டுப் பூனைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

கடத்திச் செல்லப்படும் இந்தப் பூனைகளின் இறைச்சி, பிரபல உணவகங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு 'முயல் கறி' என்ற பெயரில் வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றி விற்பனை செய்யப்படுவதாகப் பொதுமக்கள் மத்தியில் கடுமையான அச்சமும் சந்தேகமும் எழுந்துள்ளது.