காவிரி விவகாரம்.. தமிழக அரசு, திமுக தொடர்ந்த வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் ஆகஸ்ட் 17-ல் விசாரணை!

 
காவிரி மேகதாது

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாகத் தமிழக அரசும், திமுக விவசாய அணி சார்பில் ஏ.கே.எஸ்.விஜயனும் தொடர்ந்த முக்கிய வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் வரும் ஆகஸ்ட் 17-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளன. உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் சி.எஸ்.வைத்தியநாதன், ஜி.உமாபதி மற்றும் வழக்கறிஞர் பி.கருணாகரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள மனுவின் விவரங்கள்:

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கடந்த ஜூலை 30-ஆம் தேதி பிறப்பித்த உத்தரவின்படி, கர்நாடகா தன் வசமுள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீரைத் திறந்துவிட வேண்டும். 15 நாட்களுக்கு விநாடிக்கு 3,500 கன அடி வீதம் மொத்தம் 4.536 டி.எம்.சி தண்ணீர் பிலிகுண்டுலுவை வந்தடைவதை கர்நாடக அரசு உறுதிசெய்ய உத்தரவிட வேண்டும்.

காவிரி நீர்ப்பிடிப்பு கனமழை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

நடப்பு பாசன ஆண்டில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரையிலான காலத்தில் தமிழகத்திற்கு வர வேண்டிய நீரிலிருந்து விடுபட்ட 26.954 டி.எம்.சி பற்றாக்குறை தண்ணீரை விகிதாச்சார அடிப்படையில் உடனடியாக வழங்கக் கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும்.

தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவு மற்றும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், கர்நாடக அணைகளில் பாயும் நீரை ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒருமுறையும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கண்காணிக்க உத்தரவிட வேண்டும். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலைமையிலான அமர்வு முன்பு முறையீடு செய்யப்பட்டது.

அதேபோல, திமுக விவசாய அணி செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் தாக்கல் செய்துள்ள இடையீட்டு மனுவையும் விரைந்து விசாரிக்க மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் முறையிட்டார். இதை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி, தமிழக அரசு மற்றும் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் சேர்த்து ஆகஸ்ட் 17-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.