நாளை காவிரி மேலாண்மை ஆணையம் அவசரக் கூட்டம் - கர்நாடகத்தின் கோரிக்கை குறித்து முக்கிய ஆலோசனை!

 
மேலாண்மை காவேரி காவிரி நீர் ஆணையம் குழு

டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 56-வது கூட்டம் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தற்போதைய நீர்ப்பாசன சூழ்நிலைகள் குறித்து விவாதிக்க ஆணையம் நாளை மீண்டும் கூடவுள்ளது.

கடந்த கூட்டத்தில் தமிழகத்திற்கான தண்ணீர் திறப்பை நெறிப்படுத்தி ஆணையத் தலைவர் எஸ்.கே.ஹல்தார் உத்தரவு பிறப்பித்திருந்தார். அதாவது, தமிழகம் வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் கேட்ட நிலையில், கர்நாடக அரசு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு மொத்தம் 11.66 டி.எம்.சி. தண்ணீரை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.

இதன்படி கர்நாடகம் தண்ணீரைத் திறந்துவிட்ட போதிலும், தங்களது அணைகளில் போதுமான அளவு தண்ணீர் இல்லை எனத் தெரிவித்து கர்நாடக அரசு ஆணையத்திடம் மேல்முறையீடு செய்துள்ளது.

காவிரி மேலாண்மை ஆணையம்

தற்போதைய நிலவரப்படி 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வழங்கினால் கர்நாடகத்தில் குடிநீர் விநியோகம் கடும் சிரமத்தைச் சந்திக்கும் எனக் குறிப்பிட்டுள்ள கர்நாடக அரசு, தமிழகத்திற்குத் திறக்கப்படும் நீரின் அளவை வினாடிக்கு 2,000 கன அடியாகக் குறைக்க அனுமதி கோரியுள்ளது.

கர்நாடகத்தின் இந்தக் கோரிக்கை மற்றும் தமிழ்நாட்டின் தற்போதைய நீர்ப்பாசன சூழ்நிலைகள் குறித்து விவாதித்து உரிய முடிவுகளை எடுப்பதற்காகக் காவிரி மேலாண்மை ஆணையம் நாளை (செவ்வாய்க்கிழமை) கூடுகிறது. இந்தக் கூட்டத்திற்கு முன்னதாகக் காவிரி ஒழுங்காற்றுக் குழுவும் கூடி, இரு மாநிலங்களின் நீர் இருப்பு மற்றும் மழை பெய்த விவரங்களை முழுமையாக மதிப்பிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.