காவிரி போராட்டம்.. பெங்களூருவில் வாட்டாள் நாகராஜ் கைது!

 
வாட்டாள் நாகராஜ்

தமிழகத்திற்குப் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கக் கூடாது என்பதை வலியுறுத்திக் கர்நாடகாவில் இன்று போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், கன்னடச் சலவளி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜைப் போலிஸார் பெங்களூருவில் கைது செய்துள்ளனர்.

மெஜஸ்டிக் பேருந்து நிலையத்திற்குச் சென்று பேருந்துகளை இயக்க வேண்டாம் என வலியுறுத்திப் போராட்டத்தை தீவிரப்படுத்த வாட்டாள் நாகராஜ் திட்டமிட்டிருந்தார். இதை முன்கூட்டியே அறிந்த போலீசார், பெங்களூரு டாலர்ஸ் காலனியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றனர். போலிஸார் தன்னைக் கைது செய்ய முயன்றபோது, "நான் எங்கும் செல்லாமல் வீட்டில் தான் இருக்கிறேன்" எனக் கூறி, வாயில் பிளாஸ்டர் ஒட்டிக்கொண்டு அமைதி வழியில் எதிர்ப்புத் தெரிவித்தார். இருப்பினும், சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு போலிஸார் அவரை வலுக்கட்டாயமாகக் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

மைசூரு, கொப்பால், அத்திப்பள்ளி, மண்டியா போன்ற எல்லைப் பகுதிகளில் பல்வேறு கன்னட அமைப்புகள் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன.

பெரும்பாலான இடங்களில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கக் பலத்த போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெங்களூருவில் மெகா மெட்ரோ, பேருந்துகள் மற்றும் டாக்சிகள் இயங்கி வருகின்றன. கடைகள், பள்ளி-கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன. அசம்பாவிதங்களைத் தவிர்க்கப் போலீசார் பாதுகாப்பு அளித்துள்ளதால், ஓசூர் வழியே பெங்களூரு செல்லும் தமிழகப் பேருந்துகள் தடையின்றி இயக்கப்பட்டு வருகின்றன.