காவிரி நீர் விவகாரம் - மக்களவையில் ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் அளித்த டி.ஆர்.பாலு!
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைப் பின்பற்றாமல் தமிழகத்திற்குரிய தண்ணீரைத் திறந்துவிட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து, நாடாளுமன்ற மக்களவையில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் அளித்துள்ளார்.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்திற்கு உரிய நீரைப் பங்கீட்டு முறையின் கீழ் திறந்துவிடாமல் கர்நாடக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.

போதிய காவிரி நீர் கிடைக்காத காரணத்தால், காவிரி டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள குறுவை சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. தண்ணீர் பற்றாக்குறையால் வேளாண் பணி பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கான விவசாயிகள் அன்றாடம் கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், மேகதாட்டு மற்றும் காவிரி விவகாரம் குறித்துப் பிற பணிகளை ஒத்திவைத்துவிட்டு உடனடியாக விவாதிக்க வேண்டும் என இந்த நோட்டீஸில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
