தினமும் தமிழகத்திற்குக் காவிரியில் 1 டிஎம்சி நீர் திறக்கக் காவிரி ஒழுங்காற்றுக் குழு பரிந்துரை!

 
மேலாண்மை காவேரி காவிரி நீர் ஆணையம் குழு

காவிரியில் தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி வீதம் அடுத்த 15 நாட்களுக்கு நீர் திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசுக்குக் காவிரி ஒழுங்காற்றுக் குழு வலுவான பரிந்துரை செய்துள்ளது.

புதுடெல்லியில் நடைபெற்ற காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டத்தில், நீரியல் புள்ளிவிவரங்களை ஆய்வு செய்த பிறகு, ஆகஸ்ட் 12-ஆம் தேதி காலை 8 மணி முதல் அடுத்த 15 நாட்களுக்குத் தமிழகத்திற்குத் தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன்படி எல்லையான பிலிகுண்டுலுவில் தினமும் 12,000 கன அடி நீர் வந்து சேருவதை கர்நாடகம் உறுதி செய்ய வேண்டும் எனக் குழு அறிவுறுத்தியுள்ளது.

கபினி உபரிநீர்  பிலிகுண்டுலு காவிரி

ஆகஸ்ட் மாதத்திற்காகத் தமிழகத்திற்குச் சேர வேண்டிய 45 டிஎம்சி நீரையும் உடனடியாகத் திறந்து விட வேண்டும் என்று தமிழக அரசு கூட்டத்தில் வலியுறுத்தியது. இதுதவிர, ஏற்கனவே வழங்கப்படாமல் கர்நாடக அரசு நிலுவையில் வைத்துள்ள 33 டிஎம்சி நீரையும் உடனடியாகத் திறக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டது.

முன்னதாகப் பரிந்துரைக்கப்பட்ட 3,500 கன அடி நீரையும், ஆணையத் தலைவர் உத்தரவிட்ட 4.5 டிஎம்சி நீரையும் கர்நாடக அரசு இதுவரை முறையாகத் திறந்து விடவில்லை. கர்நாடகா தொடர்ந்து தண்ணீர் திறக்க மறுத்து வரும் சூழலில், ஒழுங்காற்றுக் குழுவின் இந்தப் புதிய பரிந்துரை முக்கியத்துவம் பெறுகிறது.