விஜய்க்கு மீண்டும் சிபிஐ சம்மன் - நாளை டெல்லியில் ஆஜராக உத்தரவு!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சிபிஐ மீண்டும் சம்மன் அனுப்பியுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளை வேட்புமனு தொடர்பான நேர்காணல் அறிவித்திருந்த நிலையில், நாளை டெல்லியில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது மாவட்ட ரீதியான மக்கள் சந்திப்புப் பயணத்தின் ஒரு பகுதியாகக் கரூருக்குச் சென்றபோது ஏற்பட்ட துயரமான கூட்ட நெரிசல் விவகாரத்தில், சிபிஐ தனது விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட எதிர்பாராத கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

முதலில் தமிழகக் காவல்துறையின் சிறப்புக் குழு விசாரித்த இந்த வழக்கு, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ-க்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாகத் தவெக நிர்வாகிகள் புஸ்சி ஆனந்த், நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ஏற்கனவே சிபிஐ முன்பு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். நடிகர் விஜய்யும் இதுவரை இரண்டு முறை டெல்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
தற்போது இந்த வழக்கில் கூடுதல் விவரங்களைப் பெறவும், இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்யும் முன்னதாகச் சில விளக்கங்களைப் பெறவும் விஜய்க்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதன்படி, நாளை (மார்ச் 10) டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் அவர் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தவெக சார்பில் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான முதற்கட்ட நேர்காணல் நாளை (மார்ச் 10) பனையூர் அலுவலகத்தில் நடைபெறவிருந்தது. தற்போது அதே நாளில் சிபிஐ விசாரணைக்குச் செல்ல வேண்டியிருப்பதால், இந்த நேர்காணல் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்மன் அரசியல் உள்நோக்கம் கொண்டதா அல்லது வழக்கமான நடைமுறையா என்பது குறித்துத் தவெக தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வமான அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
