விஜய்யிடம் சிபிஐ 2 நாட்கள் விசாரணை? திங்கட்கிழமை வரை நீடிக்கும் எனத் தகவல்!
கரூர் கூட்ட நெரிசல் மரணங்கள் தொடர்பான வழக்கில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களிடம் இன்று ஒரு நாள் மட்டுமின்றி, தொடர்ந்து இரண்டு நாட்கள் விசாரணை நடத்த சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிபிஐ அனுப்பிய மூன்றாவது சம்மனை ஏற்று, நடிகர் விஜய் நேற்று மதியம் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றடைந்தார். இன்று (மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லி லோதி சாலையில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் அவர் ஆஜராகிறார். ஏற்கனவே கட்சிப் பணிகளைக் காரணம் காட்டி அவர் அவகாசம் கேட்டிருந்த நிலையில், சிபிஐ அதனை நிராகரித்து இன்று ஆஜராகக் கட்டளையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது கிடைத்துள்ள தகவல்களின்படி, ஞாயிற்றுக்கிழமையான இன்று தொடங்கும் விசாரணை, நாளை திங்கட்கிழமையும் தொடர வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. "இரண்டு நாட்களுக்குத் தேவையான முன்னேற்பாடுகளுடன் விசாரணைக்கு வாருங்கள்" என்று சிபிஐ அதிகாரிகள் விஜய் தரப்பிடம் முன்கூட்டியே தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்றைய விசாரணைக்குப் பிறகு கிடைக்கும் தகவல்கள் மற்றும் விஜய்யின் பதில்களைப் பொறுத்தே, இரண்டாம் நாள் விசாரணையின் தீவிரம் அமையும் என அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் 41 உயிர்களைப் பலிவாங்கிய கரூர் சம்பவத்தில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கூட்ட மேலாண்மையில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்துப் பல நூறு கேள்விகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. குறிப்பாக, கூட்டத்தில் பங்கேற்ற முக்கியப் பிரமுகர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் விஜய்யிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், ஒரு கட்சியின் தலைவரைத் டெல்லிக்கு அழைத்து இரண்டு நாட்கள் விசாரணை நடத்துவது திட்டமிட்ட அரசியல் நடவடிக்கையா அல்லது வழக்கமான சட்ட நடைமுறையா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் சூடுபிடித்துள்ளது. டெல்லியில் விஜய் தங்கியுள்ள இடத்தைச் சுற்றிலும், சிபிஐ அலுவலக வெளியிலும் தமிழகத்தைச் சேர்ந்த தவெக தொண்டர்கள் குவியத் தொடங்கியுள்ளதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விசாரணைக்குப் பிறகு விஜய் ஏதேனும் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவாரா அல்லது சிபிஐ அடுத்தகட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தமிழகமே உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது.
