22 லட்சம் மாணவர்களுக்கு நீட் மறுதேர்வு - சி.பி.ஐ. வழக்குப்பதிவு... விசாரணை தொடக்கம் - ஒருவர் கைது!

 
நீட் தேர்வு நீட் தேர்வு

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து, கடந்த 3-ம் தேதி நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்படுவதாகத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. சுமார் 22.80 லட்சம் மாணவர்கள் எழுதிய இந்தத் தேர்வில் முறைகேடு நடந்ததை உறுதி செய்துள்ள முகமை, வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் குறித்து விசாரிக்க இந்த வழக்கைச் சி.பி.ஐ.யிடம் மத்திய அரசு ஒப்படைத்துள்ளது. தற்போது சி.பி.ஐ. அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீட்

தேர்வு முறைகேட்டிற்கு முழு பொறுப்பேற்பதாகத் தெரிவித்த தேசிய தேர்வு முகமை இயக்குநர் அபிஷேக் சிங், மறுதேர்வு குறித்து விரைவில் கால அட்டவணை வெளியிடப்படும் என்று உறுதியளித்துள்ளார். மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதப் புதிதாக விண்ணப்பிக்கத் தேவையில்லை என்றும், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே செலுத்தப்பட்ட தேர்வு கட்டணங்களைத் தேர்வர்களுக்குத் திருப்பி வழங்கவும் முகமை முடிவு செய்துள்ளது. அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் மறுதேர்வுக்கான முழுமையான கால அட்டவணை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீட்

தேர்வு மீண்டும் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் ஏற்படும் சிரமங்களை உணர்ந்திருப்பதாக முகமை தெரிவித்துள்ளது. எந்தத் தவறும் இன்றித் தேர்வு நடத்தப்படும் என்றும், முறைகேட்டில் ஈடுபட்ட குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். மாணவர்கள் இது குறித்த கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ள முகமையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையோ அல்லது தொலைபேசி எண்களையோ தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.