ஏப்ரல் மாதத்திலேயே CBSE 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்... 'இரட்டைத் தேர்வு' முறையால் மாற்றம்!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE), 2026-ஆம் ஆண்டிற்கான 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை இந்த மாத இறுதியிலேயே வெளியிடத் தீவிரமாகத் தயாராகி வருகிறது. வழக்கமாக மே மாதத்தில்தான் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு முடிவுகள் ஒன்றாக வெளியாகும். ஆனால், இந்த கல்வி ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 'இரட்டைத் தேர்வு முறை' காரணமாக இந்த அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது.

இந்த புதிய முறையின்படி, தற்போது நடந்து முடிந்த முதல் கட்டத் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் ஏப்ரல் இறுதிக்குள் அறிவிக்கப்படும். இதில் தங்கள் மதிப்பெண்களால் திருப்தி அடையாத அல்லது தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, தங்களின் தரத்தை உயர்த்திக்கொள்ள உடனடியாக ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இதற்கான இரண்டாம் கட்டத் தேர்வுகள் வரும் மே 15-ஆம் தேதி தொடங்கி ஜூன் 1, 2026 வரை நடைபெறவுள்ளன. இந்த இரண்டு தேர்வுகளில் மாணவர்கள் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ, அதுவே இறுதி மதிப்பெண்ணாகக் கணக்கில் கொள்ளப்படும்.
