சிபிஎஸ்இ பிளஸ் 2 மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு... இன்று நள்ளிரவு வரை கால அவகாசம்!
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டிற்குவிண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை, இன்று நள்ளிரவு வரை நீட்டித்து மத்திய இடைநிலை கல்வி வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய இடைநிலை கல்வி வாரியம் நடத்திய பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியாகின. இதில் தங்களது மதிப்பெண்களில் திருப்தி இல்லாத மற்றும் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய விரும்பும் மாணவர்களுக்கான விண்ணப்பப் பதிவு கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.

இந்த மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடையவிருந்தது. எனினும், பல்வேறு காரணங்களால் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களின் நலன் மற்றும் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு, இந்த அவகாசத்தை மேலும் ஒரு நாள் நீட்டிக்க சிபிஎஸ்இ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
புதிய அறிவிப்பின்படி, தங்களது விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய விரும்பும் பிளஸ் 2 மாணவர்கள், இன்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். விடைத்தாள் நகல் பெறுதல், மதிப்பெண் சரிபார்ப்பு மற்றும் மறுமதிப்பீடு ஆகிய சேவைகளுக்குச் சிபிஎஸ்இ-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.gov.in வாயிலாக மாணவர்கள் தாமதமின்றி உடனடியாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதுவே இறுதி வாய்ப்பு என்பதால், மதிப்பெண் உயரும் என்ற நம்பிக்கையில் இருக்கும் மாணவ, மாணவிகள் இந்த கூடுதல் அவகாசத்தைப் பயன்படுத்தி இன்று நள்ளிரவிற்குள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தித் தங்களது பதிவை உறுதி செய்து கொள்ளுமாறு கல்வி அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
