சிபிஎஸ்இ 9, 10-ம் வகுப்புகளில் 3-வது மொழியில் தேர்ச்சி பெறுவது இனி கட்டாயம் - புதிய விதிமுறை அமல்!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மொழிப் பாடக் கொள்கையில் மிக முக்கியமான அதிரடி மாற்றம் ஒன்றை அறிவித்துள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையின் வழிகாட்டுதலின்படி, மாணவர்கள் இனி 3-வது மொழியிலும் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ அமைப்பின் புதிய விதிகளின்படி, 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கும் மூன்றாவது மொழிக்கான பள்ளி அளவிலான உள்மதிப்பீட்டுத் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி மதிப்பெண்களைப் பெற வேண்டும். இந்த புதிய மொழித் தேர்ச்சி விதிமுறை இரண்டு கட்டங்களாக அமல்படுத்தப்பட உள்ளது.

நடப்பு கல்வி ஆண்டு (2026-27): இந்த புதிய விதிமுறை நடப்பு கல்வி ஆண்டிலேயே 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உடனடியாக அமலுக்கு வருகிறது.
அடுத்த கல்வி ஆண்டு (2027-28): அடுத்த கல்வி ஆண்டில் 10-ஆம் வகுப்பு பயிலவிருக்கும் மாணவர்களுக்கு இந்த விதிமுறை அமல்படுத்தப்படும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த விதிமுறையில் மாணவர்களின் தேர்ச்சி மற்றும் சான்றிதழ் வழங்குவது குறித்துப் பல்வேறு முக்கிய வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
9-ஆம் வகுப்பில் தவறினாலும் அனுமதி: 9-ஆம் வகுப்பில் உள்ள 3-வது மொழித் தேர்வில் ஒரு மாணவர் தேர்ச்சி பெறத் தவறினாலும், அவர் 10-ஆம் வகுப்பிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார்.

10-ஆம் வகுப்பு தேர்ச்சி கட்டாயம்: 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து இறுதிச் சான்றிதழ் பெற வேண்டும் என்றால், 10-ஆம் வகுப்பில் உள்ள 3-வது மொழித் தேர்வில் மாணவர்கள் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு இறுதிச் சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.
பள்ளிகளே நடத்தும் மறுதேர்வு: ஒருவேளை மாணவர்கள் இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறத் தவறினால், அவர்களுக்காகப் பள்ளிகளே தனியாக மறுதேர்வு (Re-exam) நடத்தி அவர்களைத் தேர்ச்சி பெற வைக்க வேண்டும்.
சான்றிதழில் 'R3' குறியீடு: மாணவர்கள் இந்த மூன்றாவது மொழியில் பெற்றுள்ள தேர்ச்சி விபரங்கள், அவர்களின் இறுதி மதிப்பெண் சான்றிதழில் 'R3' என்ற சிறப்பு குறியீட்டின் மூலம் குறிக்கப்படும்.
