சிபிஎஸ்இ டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில் பெரும் முறைகேடு... தலைவர் மற்றும் செயலாளர் இடமாற்றம்!
சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்துவதற்காக இம்முறை புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட டிஜிட்டல் மதிப்பீட்டு முறையில் மிகப்பெரிய அளவில் குளறுபடிகள் மற்றும் முறைகேடுகள் நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிபிஎஸ்இ தலைவர் ராகுல் சிங் மற்றும் செயலாளர் ஹிமான்ஷு குப்தா ஆகிய இருவரையும் தேசிய கல்வி வாரியத்தில் இருந்து இடமாற்றம் செய்து ஒன்றிய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இதற்குக் காரணமான தொழில்நுட்ப சேவை கொள்முதல் குறித்து முழுமையாக விசாரிக்க ஒருநபர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் பதிமூன்றாம் தேதி பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தேர்ச்சி விகிதம் பெருமளவில் குறைந்ததோடு பல மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மிகக் குறைவாக வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் வழக்கத்திற்கு மாறாக நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவச் செல்வங்கள் தங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள் நகலைக் கோரி விண்ணப்பித்த போது, அதில் பல பக்கங்கள் விடுபட்டிருப்பதும், பக்கங்கள் மங்கலாக இருப்பதும் மற்றும் விடைத்தாள்களே முற்றிலும் மாறியிருப்பதும் போன்ற அதிர்ச்சிப் புகார்கள் அம்பலமாகின.

ஆசிரியர்கள் விடைத்தாள்களை நேரடியாகத் திருத்துவதற்குப் பதிலாக, அவை அனைத்தும் ஸ்கேன் செய்யப்பட்டு கணினி வழியாகத் திருத்தப்படும் புதிய ஆன் ஸ்கிரீன் மார்க்கிங் என்ற டிஜிட்டல் முறையே இந்த ஒட்டுமொத்தக் குளறுபடிகளுக்கும் முக்கியக் காரணம் என மாணவர்களும் பெற்றோர்களும் குற்றம் சாட்டியுள்ளனர். கல்வி வாரியத்தின் இந்த அலட்சியப் போக்கினால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளதாகப் பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்த உயர்மட்ட அதிகாரிகளின் இடமாற்ற நடவடிக்கை கல்வி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
