பட்டப்பகலில் குழந்தையுடன் சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... சிசிடிவி வீடியோ!

 
சிசிடிவி சிசிடிவி

தெலங்கானா மாநிலம் ஐதராபாத் மணிகொண்டா பகுதியில், பட்டப்பகலில் குழந்தையுடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணிடம் மர்ம நபர் ஒருவர் மிக மோசமான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுத் தப்பியோடிய அதிர்ச்சிச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துணிகரச் செயலின் சிசிடிவி (CCTV) காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பொதுமக்களிடையே மாபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மணிகொண்டா அல்காபூர் டவுன்ஷிப்   4-வது வார்டு பகுதியில் உள்ள பிரணதி ஈஷா அடுக்குமாடி குடியிருப்பு அருகே இக்கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண், பள்ளிக்குச் சென்ற தனது குழந்தையைத் திரும்ப அழைத்துக் கொண்டு, இடது கையில் குழந்தையைத் தூக்கியபடி சாலையோரமாக நடந்து வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து அசுர வேகத்தில் நடந்து வந்த ஒரு பதின்பருவ வாலிபர், திடீரெனப் பெண்ணின் பின்னால் வந்து அவரது ஆடையை அநாகரிகமாக மேல்நோக்கி இழுத்துவிட்டு, நொடிப் பொழுதில் அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளார்.

எதிர்பாராத இந்தத் திடீர் பாலியல் அத்துமீறலால் நிலைகுலைந்து போன அந்தப் பெண், அலறியடித்தபடி பின்னால் திரும்பிப் பார்ப்பதற்குள் அந்த மர்ம நபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டார். இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட பெண் அளித்த அவசரப் புகாரின் பேரில், ஐதராபாத் போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப்பிரிவுகளின் கீழ் பெண்ணின் கற்புக்குப் பங்கம் விளைவித்தல் மற்றும் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்தல் (Stalking) ஆகிய குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

அப்பகுதியில் உள்ள சுமார் 50 முதல் 60 சிசிடிவி கேமரா காட்சிகளைத் தற்பொழுது காவல் துறையினர் போர்க்கால அடிப்படையில் தீவிரமாக ஆய்வு செய்து, தலைமறைவாக உள்ள அந்த மர்ம நபரை வலைவீசித் தேடி வருகின்றனர். சாமானியப் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பொதுவெளியில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதை இந்தச் சசிடிவி வீடியோ வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளதாகக் கூறி சமூக ஆர்வலர்கள் தங்களின் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.