ரசிகர்கள் கொண்டாட்டம்... 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடக்கம்: முதல் நாள் காட்சிகளை அள்ளும் தவெக ரசிகர்கள்!

 
ஜனநாயகன்

நடிகர் விஜய் திரையுலகை விட்டு முழுமையாக விலகி அரசியலில் களம் காண்பதற்கு முன்பாக, அவர் நடிப்பில் உருவாகியுள்ள அவரது இறுதித் திரைப்படமான 'ஜனநாயகன்' வரும் ஜூலை 23ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில், ஒட்டுமொத்தத் திரையுலகமும் எதிர்பார்த்துக் காத்திருந்த இப்படத்தின் அதிகாரப்பூர்வ முன்பதிவு இன்று முதல் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது.

மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய மாநகரங்களில் உள்ள முன்னணித் திரையரங்குகளில் இந்த முன்பதிவு தொடங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் மின்னல் வேகத்தில் விற்றுத் தீர்ந்து வருகின்றன. திரைத்துறையில் உச்சக்கட்ட மார்க்கெட்டில் இருக்கும்போதே மக்கள் பணிக்காகத் தனது சினிமா வாழ்க்கையை விஜய் தியாகம் செய்வதால், அவரது இந்தக் கடைசிப் படைப்பைக் கொண்டாட்டமாகக் கொண்டாட ரசிகர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் முடிவு செய்துள்ளனர்.

ஜனநாயகன்

இதன் காரணமாக, ஜூலை 23ஆம் தேதி வெளியாகும் முதல் நாள் முதல் காட்சி, அதிலும் குறிப்பாக அதிகாலைக் காட்சிகளுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஆன்லைன் தளங்களில் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு வருகின்றனர்.

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்திற்குத் தணிக்கைக் குழு அண்மையில் 'ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது. சுமார் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம், அரசியல் வசனங்கள் மற்றும் அதிரடியான 10 சண்டை காட்சிகளுடன் பக்கா கமர்ஷியல் மற்றும் மாஸ் என்டர்டெய்னராக இருக்கும் என்று படக்குழு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதால், முன்பதிவுக்கான மும்முரம் முன்னெப்போதும் இல்லாத அளவிற்குத் தற்பொழுது மதுரையில் எகிறியுள்ளது.