ஆடிப்பெருக்குக் கொண்டாட்டம்... கொள்ளிடம் ஆற்றில் திரண்ட பக்தர்கள்!

 
ஆடிப்பெருக்கு கொள்ளிடம்

ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கொள்ளிடம் ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் புதுமணத் தம்பதிகள் திரண்டு புனித நீராடி வழிபாடு நடத்தினர்.

சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை கொள்ளிடம் ஆற்றில், ஆடிப்பெருக்கையொட்டி சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோவில் மற்றும் சீர்காழி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெருந்திரளான மக்கள் வருகை தந்தனர்.

ஆடிப்பெருக்கு

ஆற்றங்கரையில் பெண்கள் தலைவாழை இலையிட்டுத் தேங்காய், பழங்கள், காதோலை கருகமணி, காப்பரிசி மற்றும் மஞ்சள்-குங்குமம் வைத்துச் சிறப்புப் பூஜைகள் செய்து காவிரித் தாயை வழிபட்டனர்.

ஆடிப்பெருக்கு நாளில் தாலிக்கயிறு மாற்றுவது மங்களகரமானது என்பதால், புதுமணப் பெண்கள் தங்களது பழமையான தாலிக்கயிற்றை மாற்றிப் புதிய மஞ்சள் கயிற்றைக் கட்டிக்கொண்டனர்.

ஆடிப்பெருக்கு

குடும்பம் செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஐதீகத்தின்படி, புதுமணத் தம்பதியர் தங்களது திருமண மாலைகளை ஓடும் கொள்ளிடம் ஆற்று நீரில் விட்டு வேண்டிக்கொண்டனர்.

ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு, உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் இருந்து சுவாமியின் பிரதிநிதியான சந்திரசேகர சுவாமி புறப்பட்டு வல்லம்படுகை கொள்ளிடக்கரைக்கு எழுந்தருளினார். தொடர்ந்து அஸ்திரராஜருக்குச் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றுத் தீர்த்தவாரி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தத் தீர்த்தவாரியைக் கண்டுகளிக்க ஏராளமான பக்தர்கள் கொள்ளிடக்கரையில் கூடியிருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.