திமுகவில் இருந்து அடுத்தடுத்து விலகும் பிரமுகர்கள்... பாமகவில் இணைகிறாரா இன்பசேகரன்? தேர்தல் நேரத்தில் பின்னடைவு!
வேட்பாளர் தேர்வு மற்றும் தொகுதி ஒதுக்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சில பகுதிகளில் முக்கியத் தூண்கள் சரிந்து வருகின்றன.
சென்னை தியாகராய நகர் (தி.நகர்) தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினர் ஜே.கருணாநிதி, தனக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் கடும் அதிருப்தியில் இருந்தார். இந்நிலையில் தனது கட்சிப் பதவிகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாகத் தலைமைக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். இந்தப் பகுதியில் தவெக மற்றும் அதிமுக பலமாக உள்ள நிலையில், சிட்டிங் எம்.எல்.ஏ-வையே மாற்றியது தொண்டர்கள் மத்தியிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே போன்று தருமபுரி மாவட்டம் பென்னாகரம் தொகுதியில் முன்னாள் எம்.எல்.ஏ பி.என்.பி. இன்பசேகரனுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை. இன்பசேகரன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அவர் விரைவில் பாமக-வில் இணைய உள்ளதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் தீயாய்ப் பரவி வருகின்றன. பென்னாகரம் பாமக-வின் கோட்டை என்பதால், இன்பசேகரன் அங்கு சென்றால் அது திமுக-விற்குப் பெரும் பின்னடைவாக அமையும் எனக் கருதப்படுகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வடகிழக்கு ஒன்றியச் செயலாளர் சுரேஷ்குமார், கட்சித் தலைமையின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தல் நேரத்தில் ஒரு ஒன்றியச் செயலாளர் விலகுவது அந்தத் தொகுதியின் வாக்குச் சேகரிப்பைப் பாதிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்தத் தொடர் விலகல்கள் குறித்து திமுக தலைமை இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், அதிருப்தியில் உள்ளவர்களைச் சமாதானப்படுத்த மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் நியமித்துள்ளதாகத் தெரிகிறது. "தேர்தல் நேரத்தில் இது போன்ற மாற்றங்கள் சகஜம் தான்" என ஒரு தரப்பினர் கூறினாலும், முக்கிய நிர்வாகிகள் வெளியேறுவது எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாக அமைய வாய்ப்புள்ளது.
