விளையாட செல்போன் தரல... 12 ம் வகுப்பு மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த பரவாக்கோட்டை தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் தென்கோவன். இவரது 17 வயது மகன் தர்ஷன், பரவாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை மாலை பள்ளி முடிந்து வழக்கம்போல் வீட்டுக்கு வந்த தர்ஷன், விளையாடுவதற்காகத் தனது தந்தையிடம் செல்போன் கேட்டுள்ளார்.
விளையாடுவதற்குச் செல்போன் தர முடியாது என்று தந்தை தென்கோவன் கண்டிப்புடன் கூறியதாகத் தெரிகிறது. இதனால் கடுமையான மன விரக்தி அடைந்த தர்ஷன், அன்று இரவு நேரத்திலே வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்துத் தர்ஷனின் தாயார் மாதவி அளித்த புகாரின் பேரில் பரவாக்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

போலீசார் உயிரிழந்த தர்ஷனின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இத்துயரச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தந்தை செல்போன் தராத விரக்தியில் பள்ளி மாணவர் எடுத்த இந்த விபரீத முடிவு அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
