அரசு பேருந்துகளில் பயணிகள் செல்போன் பயன்படுத்த புதிய கட்டுப்பாடு... வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு!

 
arasu perundhu

தமிழ்நாடு அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்கள் தங்களது செல்போன்களைப் பயன்படுத்தும் முறையில் போக்குவரத்துத் துறை அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சக பயணிகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் செல்போன்களைப் பயன்படுத்த வேண்டும் எனப் புதிய கட்டுப்பாடுகள் வழிகாட்டப்பட்டுள்ளன. பேருந்துப் பயணங்களின் போது செல்போன் சத்தத்தால் பயணிகள் இடையே அடிக்கடி ஏற்படும் தேவையற்ற தகராறுகளைத் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துத் துறை செயலாளர் நிர்மல் ராஜ் இந்த முக்கிய சுற்றறிக்கையை அனைத்துக் மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

புதிய நெறிமுறைகளின்படி அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது ஸ்பீக்கர் போனில் உரக்கப் பேசுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதேபோல் செல்போன்களில் பாடல்கள் கேட்பது, வீடியோக்கள் மற்றும் படங்களைப் உரத்த சத்தத்துடன் பார்ப்பது போன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் தங்களது தனிப்பட்ட பயன்பாட்டிற்கு இயர்போன் அல்லது ஹெட்போன் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பேருந்து ஓட்டுநர்களும் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிக்க விடக்கூடாது எனவும் அந்தச் சுற்றறிக்கையில் மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அனைத்துப் பயணிகளும் இந்த புதிய கட்டுப்பாடுகளை அறிந்து கொண்டு முறையாகப் பின்பற்றும் வகையில் பேருந்துகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக அனைத்து அரசுப் பேருந்துகளிலும் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களைப் பயணிகளின் பார்வையில் படுமாறு ஒட்ட உத்தரவிடப்பட்டுள்ளது. விதிகளை மீறும் பயணிகள் குறித்து நடத்துனரிடம் புகார் தெரிவிக்கலாம் எனவும், அமைதியான பயண சூழலை உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது. அரசுப் பேருந்துகளில் செல்போன் பயன்பாட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள இந்த புதிய கட்டுப்பாடுகள் அமைதியை விரும்பும் பயணிகள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.