இன்று முதல் தமிழ்நாட்டில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு களப் பணிகள் தொடக்கம் - டிஜிட்டல் முறையில் வீடுகள் கணக்கெடுப்பு!

 
மக்கள் தொகை

இந்தியாவில் முதன்முறையாக முழுமையான டிஜிட்டல் தொழில்நுட்பக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டக் களப்பணிகள் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் தொடங்குகின்றன. வரும் ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்களப்பணியின் போது, வீடுகளின் பட்டியல் மற்றும் வீட்டுவசதி தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் 19,000 அதிகாரிகளின் மேற்பார்வையில் சுமார் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் வீடு வீடாகச் சென்று இந்தத் தரவுகளைச் சேகரிக்க உள்ளனர். தரவுகளை விரைவாகவும் துல்லியமாகவும் பதிவு செய்ய, இந்தியாவில் முதன்முறையாகக் கணக்கெடுப்பாளர்கள் ஒரு பிரத்யேக மொபைல் செயலியை பயன்படுத்த உள்ளனர்.

மக்கள் தொகை மக்கள்தொகை

வீடுகளின் நிலை, குடிநீர், கழிப்பறை, சமையல் எரிவாயு, மின்சார வசதி மற்றும் இணைய வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து 33 கேள்விகள் மட்டுமே முதல் கட்டத்தில் கேட்கப்படும். குடும்ப உறுப்பினர்களின் முழு விவரங்கள் 2-ஆம் கட்டக் கணக்கெடுப்பில் சேகரிக்கப்படும். பொதுமக்கள் தங்களாகவே இணையத்தில் விவரங்களைப் பதிவிடும் 'சுய-கணக்கெடுப்பு' வசதி கடந்த ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை நடைமுறையில் இருந்தது.

தமிழ்நாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் (se.census.gov.in) வழியாகத் தங்கள் விவரங்களை வெற்றிகரமாகப் பதிவு செய்துள்ளனர். ஆன்லைனில் சுய-கணக்கெடுப்பை முடித்தவர்கள், தங்கள் வீட்டிற்கு வரும் கணக்கெடுப்பாளரிடம் தங்களுக்குக் கிடைத்த அடையாள எண்ணைக் காண்பித்தால் போதுமானது. ஆன்லைனில் பதிவு செய்யாத குடும்பங்களுக்கும் கணக்கெடுப்பாளர்கள் நேரில் வந்து விவரங்களைச் சேகரிப்பார்கள்.

மக்கள்தொகை

1948-ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின்படி, பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் அனைத்துத் தகவல்களும் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்பட்டு, முற்றிலும் ரகசியமாக வைக்கப்படும்.

இத்தரவுகள் அரசுத் திட்டமிடல், கொள்கை வடிவமைப்பு மற்றும் சமூக-பொருளாதார வளர்ச்சி ஆய்வுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என்பதால், பொதுமக்கள் களப்பணியாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.