ஆன்லைன் மூலம் வீட்டு வசதிகள் குறித்த சுய கணக்கெடுப்புப் பதிவு... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!

 
சென்சஸ்

தமிழ்நாட்டில் வீட்டு வசதிகள் குறித்த சுய கணக்கெடுப்புப் பணிகள் இன்று முதல் முறையாகத் தொடங்குகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்களின் விவரங்களை இணைய வழி மூலமாக எவ்வாறு எளிதாகப் பதிவு செய்வது என்பது குறித்து மக்கள்தொகை கணக்கெடுப்பு இயக்குனரகம் விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் குறிப்பிட்ட இணையதள முகவரிக்குச் சென்று மாநிலம் என்ற இடத்தில் தமிழ்நாட்டைத் தேர்வு செய்து குறியீட்டு எழுத்துகளைப் பதிவு செய்ய வேண்டும். பின்னர் தங்களின் அலைபேசி எண்ணைக் குறிப்பிட்டு அதில் வரும் ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொல்லைப் பெற்று இப்பணியைத் தொடங்கலாம்.

சென்சஸ்

இந்தப் பதிவு செய்யும் பக்கத்தில் மொத்தம் பதினாறு மொழிகள் இடம் பெற்றுள்ளதால் பொதுமக்கள் தங்களுக்குத் தெரிந்த மொழியினைத் தேர்வு செய்து விவரங்களைப் பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதன்பின்னர் தங்களின் மாவட்டம், கிராமம் அல்லது நகரம் மற்றும் அஞ்சல் குறியீட்டு எண் ஆகிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். இந்தத் தகவல்களைப் பதிவு செய்தவுடன் இணைய வரைபடம் மூலமாகத் தங்களின் வீடு அமைந்துள்ள இடம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படும். இதனைத் தொடர்ந்து வீட்டு வசதிகள் தொடர்பாக வரிசையாகக் கேட்கப்படும் முப்பத்து மூன்று கேள்விகளுக்குப் பொதுமக்கள் தங்களின் சரியான பதில்களை அளிக்க வேண்டும்.

சென்சஸ்

இறுதியாகப் பொதுமக்கள் தாங்கள் அளித்த பதில்கள் யாவும் சரியாக இருக்கிறதா என்பதைப் பார்வையிட்டு இணையத்தில் சமர்ப்பித்தவுடன் விவரங்கள் கணினியில் பதிவாகிவிடும். இதனை உறுதி செய்யும் வகையில் அலைபேசிக்கு பதினொன்று இலக்க எண் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்படும். பின்னர் வீடுகளுக்கு நேரடியாக வரும் கணக்கெடுப்புப் பணியாளர்களிடம் இந்த எண்ணைக் காண்பித்து விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ளலாம். பொதுமக்கள் தங்களின் வீடுகளில் இருந்தபடியே இக்கணக்கெடுப்பை நிறைவு செய்ய இந்த எளிய இணைய வழி முறை பெரிதும் துணையாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.