தமிழகத்தில் அதிகரிக்கும் கொலைச் சம்பவங்கள்… ஆளுநரிடம் விளக்கம் கேட்கும் மத்திய அரசு!
தமிழகத்தில் சமீப நாட்களாகப் பதிவாகும் கொலை மற்றும் வன்முறைச் சம்பவங்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இந்நிலையில், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரிடம் விரிவான அறிக்கை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த நவம்பர் 8-ம் தேதி தீபாவளி அன்றும், நவம்பர் 9-ம் தேதி அதிகாலையிலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொலைச் சம்பவங்கள் நடந்ததாக செய்திகள் வெளியாகின. குறிப்பாக, தேனியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் இளைஞர்கள் கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குடியாத்தம் அருகே ஞானவேல் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமும் கவனம் பெற்றது.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக உயிரிழப்பு எண்ணிக்கையில் போலீஸ் தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மாறுபட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, சமீபத்திய வன்முறைச் சம்பவங்கள், அவற்றைக் கட்டுப்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் குறித்து ஆளுநரிடம் மத்திய அரசு விளக்கம் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, சட்டம் ஒழுங்கு விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் தமிழக அரசை விமர்சித்து வருகின்றன. மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் கூடுதல் கவனத்தைப் பெற்றுள்ளது.
