குடிநீர் குளத்தில் தகராறு... துப்பாக்கிச் சூட்டில் 25 பேர் பலி!

 
ஆப்பிரிக்கா

 

ஆப்பிரிக்க நாடான சாட்டில் குடிநீர் ஆதாரத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாட் நாட்டின் ஹட்ஜர்-லாமிஸ் மற்றும் பஹ்ர் எல்-கசால் மாகாணங்களுக்கு இடையிலான எல்லைப் பகுதியில் கடந்த அக்டோபர் 30-ம் தேதி இந்தச் சம்பவம் நடந்துள்ளது. கிரெடா சமூகத்தைச் சேர்ந்த கால்நடை மேய்ப்பவர் ஒருவர், தனது கால்நடைகளுக்குத் தண்ணீர் காட்டுவதற்காகக் குளத்திற்குச் சென்றபோது, குக்கா சமூகத்தைச் சேர்ந்த ஒருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது கிரெடா சமூகத்தைச் சேர்ந்த நபர் துப்பாக்கியால் மற்றொரு நபரின் காலில் சுட்டதாகவும், இதையடுத்து இரு சமூகத்தினரும் ஆயுதங்களுடன் திரண்டு மோதலில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருதரப்பினரும் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. தகவலறிந்த பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்துக்குச் சென்று மோதலைக் கட்டுப்படுத்தினர். இந்தச் சம்பவம் தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.