கால்பந்து சாம்பியன்ஸ் லீக்: பார்சிலோனாவுக்கு அதிர்ச்சி தோல்வி - லிவர்பூலை வீழ்த்தியது பி.எஸ்.ஜி!

 
கால்பந்து கால்பந்து

ஐரோப்பிய கிளப் அணிகளுக்கு இடையிலான மதிப்புமிக்க சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் கால்இறுதிச் சுற்று ஆட்டங்கள் தொடங்கிவிட்டன. இதில் பாரீஸ் மற்றும் பார்சிலோனாவில் நடைபெற்ற இரண்டு வெவ்வேறு ஆட்டங்களில் பி.எஸ்.ஜி. மற்றும் அட்லெட்டிகோ மாட்ரிட் அணிகள் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளன.

பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்ற ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான பி.எஸ்.ஜி. அணி இங்கிலாந்தின் வலிமையான லிவர்பூல் அணியை எதிர்கொண்டது. ஆட்டம் தொடங்கிய 11-வது நிமிடத்திலேயே பி.எஸ்.ஜி. வீரர் டிசைட் டுயே முதல் கோலை அடித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

கால்பந்து

இரண்டாம் பாதியில் 65-வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் கவராத்ஸ்ஹெலியா அபாரமாக மற்றொரு கோல் அடிக்க, பி.எஸ்.ஜி. 2-0 என முன்னிலை பெற்றது. கடைசி வரை போராடிய லிவர்பூல் அணியால் பதில் கோல் அடிக்க முடியாததால், பி.எஸ்.ஜி. வெற்றி பெற்றது.

பார்சிலோனாவில் நடைபெற்ற ஸ்பெயின் நாட்டின் இரு பெரும் கிளப் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பெரும் பரபரப்பு நிலவியது. ஆட்டத்தின் 44-வது நிமிடத்தில் பார்சிலோனா வீரர் குபார்ஸ் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதால், நடுவர் அவருக்குச் சிவப்பு அட்டை காண்பித்து வெளியேற்றினார். இதனால் பார்சிலோனா அணி மீதமுள்ள நேரம் முழுவதும் 10 வீரர்களுடனேயே விளையாட வேண்டிய நெருக்கடிக்குத் தள்ளப்பட்டது.

கால்பந்து

இதனைச் சாதகமாக்கிக் கொண்ட அட்லெட்டிகோ மாட்ரிட் அணி, 45-வது நிமிடத்தில் ஜூலியன் அல்வாரெஸ் மூலமும், 70-வது நிமிடத்தில் அலெக்சாண்டர் சார்லோத் மூலமும் கோல்களைப் புகுத்தியது. இறுதியில் 2-0 என்ற கோல் கணக்கில் அட்லெட்டிகோ மாட்ரிட் வெற்றியை ருசித்தது.

பார்சிலோனா அணி தனது சொந்த மண்ணிலேயே தோல்வியைத் தழுவியுள்ளது அதன் ரசிகர்களுக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அடுத்த சுற்று ஆட்டங்களில் லிவர்பூல் மற்றும் பார்சிலோனா அணிகள் மீண்டெழுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.