பத்திரப்பதிவில் மாற்றம்: இனி கட்டணமில்லா வில்லங்கச் சான்று போதும்!

 
ஆன்லைன் பத்திரப்பதிவு

தமிழகத்தில் சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாகச் செல்லாமல் ஆன்லைன் மூலம் ஆவணங்களைப் பதிவு செய்யும் திட்டத்தில் பொதுமக்களின் வசதிக்காகப் பதிவுத்துறை முக்கியத் தளர்த்தல்களைச் செய்துள்ளது.

புதிய திட்டங்களில் வீடு மற்றும் மனை வாங்குவதற்கான பத்திரங்கள், வங்கிகளில் கடன் பெறுவதற்கான ஆவண ஒப்படைப்பு அடமானம், மற்றும் கடன் நிறைவுக்கான ரசீது போன்றவற்றை அலுவலகம் செல்லாமல் ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை அமலில் உள்ளது. இதில் எழும் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு பதிவுத்துறை சில மாற்றங்களை அறிவித்துள்ளது.

பத்திரப்பதிவு

புதிய திட்டங்களின் கீழ் வீடு, மனை விற்பனைப் பத்திரங்கள் மற்றும் அடமான ஆவணங்களைப் பதிவு செய்ய, கட்டணம் செலுத்திப் பெறப்படும் சான்றிதழுக்குப் பதிலாக இணையதளத்தில் கட்டணமின்றிப் பெறப்படும் வில்லங்கச் சான்றே போதுமானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் நிறைவு தொடர்பான ரசீது ஆவணங்களைப் பதிவு செய்வதற்கு வில்லங்கச் சான்று பார்க்கத் தேவையில்லை என்றும், ஆவண ஒப்படைப்பு அடமானப் பத்திரங்கள் குடிமக்கள் நுழைவு வாயிலாகத் தாக்கல் செய்யப்பட்டாலும் அவை பதிவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு

நேரடி வருகை இல்லாமல் மேற்கொள்ளப்படும் பத்திரப்பதிவுகளுக்கு விடுமுறை நாள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. எனினும், ஆவணதாரர் எங்கிருந்தும் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என்பதால், இதில் 'பிரசன்டேஷன் பவர்' எனப்படும் சிறப்புப் பொது அதிகார ஆவணங்களைப் பயன்படுத்த முடியாது என்று பதிவுத்துறை ஐ.ஜி. அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.