மகளிர் உரிமைத் தொகையில் மாற்றம்? வெளியான லேட்டஸ்ட் அப்டேட்!
தமிழகத்தில் தற்போது வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவது தொடர்பாக, புதிய விதிமுறைகள் மற்றும் மறுசீரமைப்புத் திட்டங்களைத் தமிழக அரசு தீவிரமாக வகுத்து வருகிறது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது, 60 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று தற்போதைய முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டிருந்தது. அதற்கேற்ப இத்திட்டத்தினை மறுசீரமைக்க அரசுக்கு உரிய கால அவகாசம் தேவைப்படுவதாக ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

தற்போதைய நிலவரப்படி, மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான உரிமைத் தொகை வழக்கம்போல் ரூ.1,000 ஆக பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. எனினும், வாக்குறுதி அளித்தபடி இத்தொகையை ரூ.2,500 ஆக உயர்த்துவதற்கு முன்பாக, நிதி மேலாண்மை மற்றும் தகுதி வரம்புகளை முறைப்படுத்த அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துள்ளதாகத் தெரிகிறது:
தற்போதைய பயனாளிகளில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களை மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இருந்து, சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் முதியோர் உதவித்தொகை திட்டத்திற்கு மாற்ற அரசு ஆலோசித்து வருகிறது.
தகுதியிருந்தும் விடுபட்டுப்போன தகுதியான புதிய பெண் பயனாளிகளை இத்திட்டத்தின் கீழ் இணைப்பதற்கான சிறப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.

இத்திட்டத்தினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில் புதிய விதிமுறைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை நிதியமைச்சகம் தயாரித்து வருகிறது. தகுதியான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு இந்த ரூ.2,500 முழுமையாகச் சென்றடைவதை உறுதி செய்வதே இதன் நோக்கமாகும்.
இத்திட்டத்தின் பெயர் மாற்றம் மற்றும் புதிய அரசாணை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அவர்களால் விரைவில் முறைப்படி வெளியிடப்படும் எனத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
