5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி... அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா மகளிர் அணி!

 
மகளிர்கிரிக்கெட் மகளிர் கிரிக்கெட்

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் காலிறுதி ஆட்டத்தில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஜப்பான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி எளிதில் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

ஜப்பானின் அய்ச்சி மற்றும் நகோயா நகரங்களில் 20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் டி20 வடிவில் நடைபெறும் மகளிர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, போட்டியை நடத்தும் ஜப்பான் அணியை எதிர்த்து விளையாடியது.

இப்போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சால் ஜப்பான் அணி தொடக்கம் முதலே தடுமாறியது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணி, 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்கள் மட்டுமே எடுத்தது.

மகளிர்கிரிக்கெட்

58 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா ஜப்பான் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். கமலினி மற்றும் பாரதி புல்மாலி ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஷபாலி வர்மாவுடன் இணைந்த ரிச்சா கோஷ் அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் சென்றனர்.

இந்திய அணி வெறும் 5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 59 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 15 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களுடன் 40 ரன்களும், ரிச்சா கோஷ் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.