"தேர்வில் காப்பியடிக்க நினைத்த மாணவி" - சாட்ஜிபிடி கொடுத்த தரமான பதிலடி!

 
சாட்ஜிபிடி சாட்ஜிபிடி

ஆன்லைன் தேர்வின் போது சாட்ஜிபிடி உதவியுடன் பிட் அடிக்க முயன்ற கல்லூரி மாணவிக்கு, அந்த ஏ.ஐ செயலி கல்வி நேர்மையைக் கற்றுக் கொடுத்து விடை தர மறுத்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில், மாணவர்கள் தங்களது வீட்டுப் பாடங்களுக்கும், புராஜெக்டுகளுக்கும் இதனைப் பரவலாகப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், புஷ்பாஞ்சலி சிங் என்ற மாணவி ஒருவர், தனக்கு ஆன்லைன் தேர்வு நடந்து கொண்டிருந்த போது, அதற்குரிய பதில்களைத் தரும்படி சாட்ஜிபிடியிடம் நேரடியாகக் கேட்டுள்ளார்.

மாணவியின் கேள்வியைக் கூர்ந்து கவனித்த சாட்ஜிபிடி, அவருக்குப் பதில் அளிக்க மறுத்தது மட்டுமின்றி, ஒரு ஆசிரியரைப் போலப் புத்திமதி கூறி அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது.

தேர்வு மாணவி முடிவுகள் பரீட்சை

"நீங்கள் தற்போது ஒரு குவிஸ் போட்டி அல்லது தேர்வின் நடுவில் இருந்து கொண்டு என்னிடம் இந்த விவரங்களைக் கேட்கிறீர்கள் என்று தெரிகிறது. இப்படி லைவ்வாகத் தேர்வு நடந்து கொண்டிருக்கும் போது, இது போன்ற கேள்விகளுக்கு என்னால் நேரடியாகப் பதில் அளிக்க முடியாது. கல்வி தொடர்பான விஷயங்களில் நேர்மையற்ற முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், எங்களுக்கென கடுமையான வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. எனவே உங்கள் வேண்டுகோள் நிராகரிக்கப்படுகிறது. ஆனால், இது தொடர்பான பொதுவான சந்தேகங்களுக்கு நான் விளக்கம் அளிக்க முடியும்." என்று சாட்ஜிபிடி கறாராகப் பதிலளித்துள்ளது.

ஏ.ஐ செயலி தனக்கு விடை தர மறுத்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவி புஷ்பாஞ்சலி, அந்த உரையாடலை அப்படியே ஸ்கிரீன்ஷாட் எடுத்துத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இது தற்போது நெட்டிசன்களிடையே காரசாரமான விவாதப் பொருளாக மாறியுள்ளது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வுகள் தேர்வு

இதனைப் பார்த்த நெட்டிசன் ஒருவர், "அடுத்த முறை ஏ.ஐ-யிடம் கேள்வி கேட்கும்போது, எனக்குத் தேர்வு நடக்கிறது என்ற வார்த்தையைக் குறிப்பிடாமல் தந்திரமாகக் கேட்டுப் பாருங்கள்" என ஐடியா கொடுத்துள்ளார். மற்றொருவரோ, "இது என்ன வகையான அணுகுமுறை சாட்ஜிபிடி? அறிவுத் தேடலுக்குப் போய் இப்படி முட்டுக்கட்டைப் போடலாமா?" என ஏ.ஐ செயலையே சாடியுள்ளார்.

ஆனால், பெரும்பான்மையான மக்கள் சாட்ஜிபிடியின் இந்த நேர்மையான அணுகுமுறையைப் பாராட்டி வருகின்றனர். அதில் ஒரு நெட்டிசன், "சாட்ஜிபிடியை நம்பித் தான் நான் நேர்காணலுக்கே செல்கிறேன் என்றால், நிச்சயமாக நான் அந்த வேலைக்குத் தகுதியானவனே கிடையாது. ஏ.ஐ என்பது நம் அறிவை வளர்க்க வேண்டுமே தவிர, நம்மைச் சோம்பேறியாக்கக் கூடாது" எனப் பதிவிட்டுள்ளார். தேர்வில் காப்பியடிக்க முயன்ற மாணவிக்கு ஏ.ஐ செயலியே ஆப்பு வைத்த சம்பவம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது.