தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்து 10 தொழிலாளர்கள் பரிதாப பலி!

 
சத்தீஸ்கர் சத்தீஸ்கர்

சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டம் சிங்கிதாரி கிராமத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையத்தில் இன்று அதிகாலை பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள கொதிகலன் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் அந்தப் பகுதியே அதிர்ந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 3 தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில் மருத்துவமனையில் மேலும் 7 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் சுமார் 40 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்து ராய்காட் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கொதிகலன் வெடித்த நேரத்தில் தொழிற்சாலைக்குள் அதிகப்படியான தொழிலாளர்கள் பணியில் இருந்ததால் அங்கு பெரும் கூட்ட நெரிசலும் குழப்பமும் ஏற்பட்டது. இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்று போர்க்கால அடிப்படையில் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மாநில முதல்வர் விஷ்ணு தியோ சாய் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்து நடந்த பகுதியில் மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் இணைந்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படும் நிலையில் தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.