போதையில் பாட்டியை அறைந்த பேரன்... நிலைதடுமாறி விழுந்து பரிதாப மரணம்!
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் அருகேயுள்ள பூந்தண்டலம் கிராமத்தில் ஒரு துயரமான சம்பவம் நடந்துள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் 94 வயதான தாயார் சரோஜா தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வயது முதிர்வின் காரணமாக சரோஜாவுக்கு அடிக்கடி தனக்குத்தானே பேசிக்கொள்ளும் பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இப்படியிருக்கையில், நேற்று வீட்டின் வாசலில் உள்ள கட்டிலில் சரோஜா படுத்திருந்தபோது அவரைக் காண்பதற்காக அவருடைய பேரன் மகேஷ் வந்துள்ளார். அப்போது 26 வயதான மகேஷ் முழுமையாக மது அருந்தியிருந்ததாகத் தெரிகிறது. கட்டிலில் படுத்திருந்த சரோஜா வழக்கம் போல தனக்குத்தானே புலம்பிக் கொண்டிருப்பதை கவனித்த மகேஷ் கடுமையான கோபமடைந்துள்ளார்.
ஏன் எப்போதும் இப்படிப் புலம்பிக்கொண்டே இருக்கிறாய் என்று ஆத்திரத்துடன் கேட்ட மகேஷ், சரோஜாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்துள்ளார். இந்த எதிர்பாராத தாக்குதலால் நிலைதடுமாறிய சரோஜா கட்டிலிலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், பாட்டியைக் கொன்ற பேரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
