பனகல் பார்க் சென்னையின் 2வது பெரிய மெட்ரோ நிலையமாக உருவாகிறது!

 
மெட்ரோ


 
சென்னையில் பொதுப்போக்குவரத்து சேவைகளில் மெட்ரோ மிகப்பெரிய பங்கு வகித்து வருகிறது. இந்நிலையில் சென்னையின் 2வது பெரிய மெட்ரோ நிலையமாக பனகல் பூங்கா மெட்ரோ நிலையம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகள் பனகல் பூங்கா பகுதியில் நடைபெற்று வருகின்றன. பனகல் பூங்கா மெட்ரோ ரயில் நிலையத்தின் நுழைவு, வெளியேறும் அமைப்புக்கு உண்டான கட்டுமான பணிகள் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மெட்ரோ


சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 3வது வழித்தடம் மாதவரம் பால் பண்ணை - சிப்காட் வரையிலும், 4வது வழித்தடத்தில் 26.1 கிலோ மீட்டா் தொலைவுக்கு கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி வரையிலும், 5வது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கு மாதவரம் - சோழிங்கநல்லூா் வரையிலும் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதற்கான போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு பனகல் பூங்கா மெட்ரோ நிலைய பணிகள் நடைபெற்று வரும் நிலையில் 2வது மிகப் பெரிய நிலையமாக உருவாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் வரையிலான வழித்தடத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் கோடம்பாக்கம் பவா் ஹவுஸ் வரை மேம்பால பாதையாகவும், கோடம்பாக்கம் மேம்பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை சுரங்கப் பாதையாகவும் வழித்தடம் அமைக்கப்பட உள்ளது.

மெட்ரோ
முதல்கட்டமாக பவர் ஹவுஸிலிருந்து பனகல் பூங்கா மெட்ரோ நிலையத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்படும். நந்தனம் மற்றும் கோடம்பாக்கம் இடையே அமையவுள்ள பனகல் பூங்கா மெட்ரோ நிலையம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தி.நகர் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படும் பகுதி என்பதாலும் வர்த்தகம் அதிகம் நடைபெறும் பகுதியாக காணப்படுவதாலும் பனகல் பூங்கா நிலையத்துக்கு கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
பனகல் பூங்கா மெட்ரோ நிலையத்தில் 6 நுழைவு மற்றும் 6 வெளியேறும் வழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 1000 பேர் ஒரே நேரத்தில் இருந்து பயணிக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.  கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி மெட்ரோ திட்டம் அமலுக்கு வந்தால் பெருமளவு போக்குவரத்து நெரிசல் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலையம் மிகப்பெரிய மெட்ரோ நிலையமாக கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில், அதற்கு அடுத்தப்படியாக பனகல் பூங்கா நிலையம் தயாராகி வருகிறது.  இத்திட்டப் பணிகள் ஜனவரி 2027க்குள் நிறைவடையும் எனத்  தகவல்கள் வெளியாகியுள்ளன.  

From around the web