இனி இஷ்டத்துக்கு வாகனங்கள் நிறுத்த முடியாது... சென்னையில் வரப்போகும் ஸ்மார்ட் வசதி!
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்துவதைத் தடுக்கவும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
பெருநகர சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து ஆணையம் (CUMTA) சார்பில், ‘எட்ஜ் ஏஐ’ தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பார்க்கிங் விதிமீறல்களைக் கண்காணிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தப்புள்ளியையும் தமிழக அரசு கோரியுள்ளது.

கேமராக்கள் மூலம் விதிமீறல்கள் கண்டறிதல்
இந்தத் திட்டத்தின் கீழ், நடைபாதைகளில் வாகனங்களை நிறுத்துவது, சாலைகளில் இரட்டை வரிசையில் வாகனங்களை நிறுத்துவது, ‘நோ பார்க்கிங்’ பகுதிகளில் கார், பைக், ஆட்டோக்களை நிறுத்துவது போன்ற விதிமீறல்கள் கண்காணிக்கப்படும்.
கேமராக்கள் மூலம் விதிமீறல் காட்சிகள் பதிவு செய்யப்படுவதுடன், வாகனங்களின் பதிவு எண்களும் தானாகவே அடையாளம் காணப்படும். புகைப்பட ஆதாரங்களுடன் விவரங்கள் டிஜிட்டல் முறையில் பதிவு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் அனுப்பும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்படுகிறது.
காலியாக உள்ள பார்க்கிங் இடங்களையும் அறியலாம்
முறையாக ஒதுக்கப்பட்ட வாகன நிறுத்துமிடங்களில் எந்த இடம் காலியாக இருக்கிறது, எது நிரம்பியுள்ளது என்பதையும் நிகழ்நேரத்தில் அறிந்துகொள்ள முடியும். வாகனம் வந்த நேரம், புறப்பட்ட நேரம், நிறுத்தப்பட்டிருந்த கால அளவு ஆகிய விவரங்களையும் தொழில்நுட்பம் பதிவு செய்யும்.
இந்தத் திட்டம் நடைமுறைக்கு வந்தால், சென்னையில் பார்க்கிங் விதிமீறல்களைக் கட்டுப்படுத்தவும், சாலைகளிலும் நடைபாதைகளிலும் ஏற்படும் இடையூறுகளைக் குறைக்கவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
