உலக தரத்துக்கு மாறும் சென்னை விமான நிலையம்... தனியார் வசம் ஒப்படைக்க மத்திய அரசு தீவிரம்!
சென்னை சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புப் பணிகளைப் பொது-தனியார் பங்களிப்பு மாதிரியின் கீழ் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது.
தமிழ்நாட்டின் தொழில் முதலீட்டு இலக்குகளுக்கு ஏற்பச் சென்னை விமான நிலையத்தில் சர்வதேச தரத்திலான உள்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகள் இல்லை என்றும், இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்கு மாற்றாகப் புதிய தகுதியான ஆபரேட்டரை நியமிக்க வேண்டும் என்றும் கோரி தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடிக்கு அவசரக் கடிதம் எழுதியிருந்தார். இக்கோரிக்கையைத் தொடர்ந்து மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

ஏற்கனவே டெல்லி, மும்பை, பெங்களூரு மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட முக்கிய பெருநகர விமான நிலையங்கள் தனியார் நிறுவனங்களால் வெற்றிகரமாக இயக்கப்பட்டு வரும் நிலையில், சென்னையிலும் இம்முறை கொண்டுவரப்படவுள்ளது. சென்னை விமான நிலையத்துடன் சேர்த்து கொல்கத்தா விமான நிலையத்தையும் தனியார் வசம் கொண்டு செல்லத் திட்டமிடப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் தினசரி செயல்பாடுகள், வணிக வளாகங்கள், வாகன நிறுத்துமிடங்கள் மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல் போன்ற மேலாண்மைப் பொறுப்புகள் நீண்ட கால குத்தகை அடிப்படையில் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும்.

விமான நிலைய நிர்வாகம் தனியாரிடம் சென்றாலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் வான்வழிப் போக்குவரத்து ஒழுங்குமுறைகளைக் கண்காணிக்கும் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் ஒட்டுமொத்த பாதுகாப்புப் பணிகள் அனைத்தும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் நேரடி கட்டுப்பாட்டிலேயே தொடரும் எனத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நிதி ஆண்டு 2025-26-ல் சுமார் 2.30 கோடி பயணிகளைக் கையாண்டுள்ள சென்னை விமான நிலையம், புதிய முனையங்களின் விரிவாக்கம் மூலம் ஆண்டிற்கு 3.5 கோடி பயணிகளைப் பராமரிக்கும் திறனை நோக்கி மேம்படுத்தப்பட்டு வருகிறது.
