சென்னையில் ஆபத்தான கட்டடங்களை கண்டறிந்து இடிக்க மாநகராட்சி ஆணையாளர் உத்தரவு... புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
சென்னையில் உள்ள ஆபத்தான மற்றும் சிதிலமடைந்த கட்டடங்களைக் கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுப்பதற்காகப் பெருநகர சென்னை மாநகராட்சி புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உதவிப் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளர்கள் தங்களது வார்டுகளில் வழக்கமான ஆய்வின் போது ஆபத்தான கட்டடங்களை அடையாளம் கண்டு உயரதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். பின்னர், கட்டடத்தின் நிலை குறித்து நேரில் ஆய்வு செய்யப்படும். குறிப்பிட்ட கட்டடம் அல்லது சொத்து தொடர்பாக உரிமையாளர் மற்றும் வாடகைதாரர்களுக்கு இடையே நீதிமன்ற வழக்குகள் ஏதேனும் நிலுவையில் உள்ளதா என்பது முன்கூட்டியே சரிபார்க்கப்பட்டு, அதற்கேற்ப நீதிமன்ற உத்தரவுகள் கண்டிப்பாகப் பின்பற்றப்படும்.

கட்டடத்தின் உறுதியை மண்டலச் செயற்பொறியாளர்களால் மதிப்பிட முடியாத பட்சத்தில், பொதுப்பணித்துறை, அண்ணா பல்கலைக்கழகம் அல்லது ஐஐடி மெட்ராஸ் போன்ற புகழ்பெற்ற நிறுவனங்களின் கட்டமைப்பு நிலைத்தன்மைச் சான்றிதழ் பெறப்படும். ஆய்வறிக்கையின் அடிப்படையில் கட்டடத்தைப் பழுதுபார்க்கவோ அல்லது இடிக்கவோ பரிந்துரை செய்யப்பட்டு, வட்டார இணை ஆணையாளர் மற்றும் துணை ஆணையாளர் ஒப்புதலுடன் உரிய காலக்கெடு வழங்கி உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்.
மாநகராட்சி சார்பில் அனுப்பப்படும் நோட்டீஸைப் பெற்றும் உரிமையாளர் நடவடிக்கை எடுக்கத் தவறினால், அக்கட்டடம் மாநகராட்சியால் நேரடியாக இடிக்கப்பட்டு, அதற்கான முழுச் செலவுத்தொகையும் உரிமையாளரிடமிருந்தே வசூலிக்கப்படும்.

இந்த விதிகள் தனியார் மற்றும் அரசு கட்டடங்கள் இரண்டிற்கும் சமமாகப் பொருந்தும். ஆபத்தான கட்டடத்தைக் காலி செய்ய மறுப்பவர்கள் காவல்துறையின் உதவியுடன் அங்கிருந்து பலவந்தமாக வெளியேற்றப்படுவர்.
