பணி நிரந்தரம் செய்யப்படாததால் மனவேதனை... மாநகராட்சி ஊழியர் தற்கொலை!

 
chennai

 

சென்னையை அடுத்த பல்லாவரம் கணபதி நகர் பகுதியில் வசித்து வருபவர்  சாமுவேல் (வயது 41). இவர் சென்னை மாநகராட்சி மண்டலம் 12-ல் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தினக்கூலி அடிப்படையில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தார். குடும்பச் செலவுகள், குழந்தைகளின் கல்விச் செலவுகள் மற்றும் வாகனக் கடன் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக இவர் பலரிடம் கடன் வாங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது. பல ஆண்டுகள் உழைத்தும் தனது வேலை நிரந்தரம் செய்யப்படாததால் இவர் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

ஆம்புலன்ஸ்

பணி நிரந்தரம் இல்லாதது மற்றும் கடன் கொடுத்தவர்களின் தொடர் நெருக்கடி காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால் சாமுவேல் தனது வீட்டில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவரது உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபரீத முடிவு குறித்து வழக்குப் பதிவு செய்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாகச் சாமுவேல் பேசிய உருக்கமான காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகிப் பரவி வருகிறது. அந்தப் பதிவில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியும் பணி நிரந்தரம் செய்யப்படாததையும், கடன் சுமையால் தனக்கு ஏற்பட்ட அழுத்தங்களையும் கண்ணீருடன் பகிர்ந்துள்ளார். மேலும் தனது மறைவிற்குப் பிறகு கடன் கொடுத்தவர்கள் யாரும் தனது மனைவி மற்றும் குழந்தைகளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும் அவர் அந்தப் பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.