சென்னை ஐஐடியில் மருத்துவப் படிப்பு... இயக்குநர் புதிய திட்டம்!

 
ஐஐடி

மருத்துவத்துறையில் பயன்படும் கருவிகளைத் தயாரிப்பதற்காகத் டாக்டர்களும் பொறியியலாளர்களும் இணைந்து செயல்பட வேண்டும் எனச் சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். பொறியியலாளர்களை மருத்துவர்களாக மாற்றுவதை விட மருத்துவர்களுக்குப் பொறியியல் பயிற்சி அளிப்பதே மிகவும் எளிதான அணுகுமுறையாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் மாணவர்கள் மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய இரண்டு துறைகளிலும் சிறந்து விளங்க முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை ஐஐடி

சென்னை ஐ.ஐ.டி. சார்பில் சொந்தமாக மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி வளாகத்தை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய மருத்துவ ஆணையத்தின் அனுமதியைப் பெற்ற பிறகு முறையான மருத்துவப் படிப்புகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரே கூரையின் கீழ் மருத்துவர்களும் பொறியியலாளர்களும் இணைந்து புதிய மருத்துவக் கருவிகளைக் கண்டுபிடிக்க இந்த முயற்சி பெரிதும் உதவும்.

தற்போது உயர்தர மருத்துவ உபகரணங்கள் தேவைக்காக வெளிநாடுகளையே நாம் அதிகம் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. இந்த நிலையை மாற்றி நம் நாட்டிலேயே சொந்தமாக மருத்துவக் கருவிகளை வடிவமைக்க வேண்டும் என்பதே இத்திதக்கத்தின் முக்கிய நோக்கமாகும். இதற்காகத் துறைசார் வல்லுநர்கள் அனைவரும் ஒரே இலக்குடன் இணைந்து செயல்படுவது அவசியம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.