வெறிச்சோடியது சென்னை... 9 லட்சம் பேர் சொந்த ஊருக்குப் படையெடுப்பு; ரயில், பேருந்து நிலையங்களில் அலைமோதிய கூட்டம்!

 
கிளாம்பாக்கம் விடுமுறை பேருந்து சிறப்பு நிலையம் கூட்டம் வெளியூர்

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டுச் சென்னையில் வசித்து வந்த பொதுமக்கள் குடும்பம் குடும்பமாகத் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்து வருவதால் சென்னை மாநகரமே வெறிச்சோடத் தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் மட்டும் சுமார் 9 லட்சம் பயணிகள் சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்குப் பயணித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை தீபாவளிப் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், வேலை மற்றும் படிப்பு நிமித்தமாகச் சென்னையில் தங்கியிருந்த தென் மற்றும் வட மாவட்ட மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்குக் கிளம்பத் தொடங்கினர். சென்னை சென்ட்ரல், எழும்பூர் மற்றும் தாம்பரம் ஆகிய முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் ஏற மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் தீபாவளி நெரிசல் சொந்த ஊர்

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கோயம்பேடு, மாதவரம் மற்றும் மறைமலைநகர் தற்காலிகப் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன. அரசு மற்றும் ஆம்னி பேருந்துகளில் இடம்பிடிக்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களை இணைக்கும் முதன்மைச் சாலையான ஜி.எஸ்.டி சாலையில் நேற்றிரவு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சொந்த வாகனங்களான கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் மக்கள் ஒரே நேரத்தில் கிளம்பியதால், தாம்பரம், குரோம்பேட்டை மற்றும் பெருங்களத்தூர் பகுதிகளில் வாகனங்கள் பல கிலோமீட்டர் தூரத்திற்கு ஊர்ந்து ஊர்ந்து சென்றன. காவல்துறையினர் விரைந்து செயல்பட்டுப் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டனர்.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வெளியூர் பயணிகள் மட்டுமன்றி, வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் தங்களது சொந்த ஊர்களில் தீபாவளியைக் கொண்டாடச் சென்னைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

பேருந்து

சென்னை சர்வதேச விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, வழக்கமாக நாள் ஒன்றுக்கு 6,500 முதல் 7,500 பயணிகள் வரை வரும் நிலையில், கடந்த இரண்டு நாட்களாக அது 8,500 முதல் 9,000 ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து அதிகளவிலான தமிழர்கள் தாய்நாடு திரும்பியுள்ளனர்.

அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், ரயில்கள், சொந்த வாகனங்கள் என அனைத்து வழிகளிலும் இதுவரை 9 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளதால் சென்னையின் முக்கிய வீதிகள் மக்கள் நடமாட்டமின்றி காலியாகக் காட்சி அளிக்கின்றன.