சபரிமலை சீசன்: சேலம் வழியாக சென்னை - கொல்லம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்!
சபரிமலை சீசனையொட்டி, பக்தர்களின் பயண நெரிசலைத் தவிர்க்கும் வகையில் சென்னை - கொல்லம் இடையே சேலம் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதன்படி, சென்னை எழும்பூர் - கொல்லம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06121) இன்று (நவம்பர் 21) முதல் ஜனவரி 23-ந்தேதி வரை சனிக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 11.40 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 5 மணிக்கு சேலம் வந்தடையும்.
சேலத்தில் இருந்து அதிகாலை 5.03 மணிக்கு புறப்படும் இந்த ரெயில், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாகச் சென்று அதே நாளில் மாலை 4.30 மணிக்கு கொல்லத்தை சென்றடையும்.

இதேபோல், கொல்லம் - சென்னை சென்டிரல் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06122) நாளை (நவம்பர் 22) முதல் ஜனவரி 24-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மாலை 6.45 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.57 மணிக்கு சேலம் வந்தடையும்.
பின்னர் சேலத்தில் இருந்து காலை 5 மணிக்கு புறப்பட்டு, ஜோலார்பேட்டை வழியாகச் சென்று காலை 11.40 மணிக்கு சென்னை சென்டிரலை சென்றடையும்.இந்தத் தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது
