உலக சாம்பியனை வீழ்த்திய சென்னை சிங்கம் - ஆசிய குத்துச்சண்டையில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேற்றம்!
மங்கோலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீரர் விஸ்வநாத் சுரேஷ் உலகத் தரம் வாய்ந்த வீரரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஆண்களுக்கான 50 கிலோ எடைப்பிரிவின் காலிறுதிப் போட்டியில், சென்னையைச் சேர்ந்த விஸ்வநாத் சுரேஷ், கஜகஸ்தானைச் சேர்ந்த சஞ்சார் தாஷ்கென்பாவை எதிர்கொண்டார்.

சஞ்சார் தாஷ்கென்பா தற்போதைய உலக சாம்பியன் மற்றும் சர்வதேச அளவில் முதல் நிலையில் உள்ள நட்சத்திர வீரர் ஆவார். மிகவும் சவாலான இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே விஸ்வநாத் சுரேஷ் தனது வேகமான மற்றும் நுட்பமான தாக்குதல்களால் எதிராளியை நிலைகுலையச் செய்தார். இறுதியில் 5-0 என்ற கணக்கில் ஒருமித்த முடிவின் அடிப்படையில் விஸ்வநாத் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அவர் அரையிறுதிக்குத் தகுதி பெற்றதுடன், இந்தியாவுக்குக் குறைந்தபட்சம் ஒரு வெண்கலப் பதக்கத்தையும் உறுதி செய்துள்ளார்.
65 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்ட மற்றொரு இந்திய வீரர் ஆதித்யா, உஸ்பெகிஸ்தானின் அப்துல்லோ மடாமினோவிடம் 5-0 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். ஏற்கனவே நிஹாத் ஜரீன், பிரீத்தி பவார் மற்றும் பிரியா ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கங்களை உறுதி செய்துள்ளனர்.

அன்குஷிதா போரோ & நரேந்தர் தங்கள் காலிறுதிப் போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். விஸ்வநாத் சுரேஷ் ஏற்கனவே இளையோர் பிரிவில் உலக மற்றும் ஆசிய சாம்பியன் பட்டம் வென்றவர். தற்போது பெரியவர்கள் பிரிவிலும் உலக சாம்பியனை வீழ்த்தியிருப்பது, இந்தியக் குத்துச்சண்டையின் எதிர்கால நம்பிக்கையாக அவரை மாற்றியுள்ளது.
