சென்னையில் போராட்டம் நடத்திய மருத்துவப் பணியாளர்கள் கைது! வீடுகளிலும் போலீஸ் கண்காணிப்பு
தமிழக அரசு பல்நோக்கு மருத்துவமனைகளில் தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் 2,500-க்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். கடந்த 2013, 2014-ம் ஆண்டுகளில் தற்காலிகப் பணியில் நியமிக்கப்பட்ட இவர்களுக்கு, ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் வழங்கப்படும் என நியமன ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், பல ஆண்டுகள் கடந்தும் அந்தக் கோரிக்கை நிறைவேறவில்லை எனப் பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து, பணி நிரந்தரம், மாதம் ஒரு நாள் விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அவர்கள் திட்டமிட்டனர். இதற்குப் போலீசார் அனுமதி மறுத்த நிலையில், போராட்டத்தைத் தடுக்க நிர்வாகிகள் மற்றும் பணியாளர்களின் வீடுகளுக்குச் சென்ற போலீசார், அவர்களை வீட்டுக்காவலில் வைத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பணியாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் ராஜரத்தினம் மைதானம் அருகே திரண்டு சாலை மறியலில் ஈடுபட்ட மருத்துவப் பணியாளர்களை போலீசார் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்று கைது செய்தனர். பின்னர், அவர்கள் அரசு வாகனங்களில் அழைத்துச் செல்லப்பட்டு அருகிலுள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
