பஸ்சுக்குள் மதுபோதையில் இளம்பெண் அட்டகாசம்! முகம் சுளித்த பயணிகள்

 
பேருந்து

 

சென்னையில் நள்ளிரவு மாநகர பேருந்தில் மதுபோதையில் இளம்பெண் ஒருவர் சக பயணிகளிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை மாநகர சொகுசுப் பேருந்தில் நேற்று நள்ளிரவு சுமார் 20 முதல் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அவர் மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

பேருந்தில் இருக்கை தொடர்பாக அந்த பெண்ணுக்கும் சக பயணிகளுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த பெண் சக பயணிகளை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், தொடர்ந்து பேருந்துக்குள் கூச்சல் குழப்பம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண், தன்னை தட்டிக்கேட்ட சக பயணிகளை நோக்கி சென்று அவர்களை கைகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், தட்டிக்கேட்ட பெண் பயணி ஒருவரின் தலைமுடியை பிடித்து இழுத்து தாக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தை பேருந்தில் இருந்த பயணி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.சம்பவம் தொடர்பாக வைரலாகி வரும் வீடியோவை அடிப்படையாகக் கொண்டு சென்னை மாநகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ரகளையில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண் யார், அவர் எந்த இடத்தில் பேருந்தில் ஏறினார் என்பது குறித்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்தில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்ததாக கூறப்படும் இந்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போலீசாரின் விசாரணை முடிவில் சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.