நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி! சென்னையில் ரூ.50 முதல் விலை - 10% தள்ளுபடி

 
நவராத்திரி

 

நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை தொடங்கியுள்ளது. தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் பூம்புகார் சார்பில் இந்த சிறப்பு கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சென்னை அண்ணா சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் நடைபெறும் இந்த கண்காட்சி அக்டோபர் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை கண்காட்சியை பொதுமக்கள் பார்வையிட்டு, தங்களுக்கு தேவையான கொலு பொம்மைகளை வாங்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளிலும் கண்காட்சி நடைபெறும்.

கொலு

இந்த கண்காட்சியில் ரூ.50 முதல் ரூ.1.25 லட்சம் வரையிலான பல்வேறு வகையான கொலு பொம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தெய்வங்களின் சிலைகள், விலங்குகள், பாரம்பரிய கதாபாத்திரங்கள் மற்றும் பல்வேறு கருப்பொருள்களை அடிப்படையாகக் கொண்ட கொலு செட்கள் இடம்பெற்றுள்ளன.

மரபாச்சி பொம்மைகள், திருமண செட், அஷ்டலட்சுமி, தசாவதாரம், அறுபடை வீடு, வைகுண்டம், பொங்கல், திருப்பதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு செட்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. களிமண், காகிதக் கூழ், பளிங்குத் தூள், மரம், டெரகோட்டா உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் செய்யப்பட்ட பொம்மைகள் விற்பனைக்கு உள்ளன.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரம்மாண்ட கொலு

தமிழகத்தைத் தவிர ஆந்திராவின் கொண்டபள்ளி, எட்டிக்கொப்பாக்கா, கர்நாடகா, கொல்கத்தா, ராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட கொலு பொம்மைகளும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன.கொலு பொம்மைகளுக்கு 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், கைவினைப் பொருட்கள், பித்தளை மற்றும் வெண்கலப் பொருட்கள், ஓவியங்கள், துணி மற்றும் பிற கைவினைப் பொருட்களையும் பொதுமக்கள் வாங்கிக்கொள்ளும் வகையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.நவராத்திரி கொலு வைக்கத் தயாராகி வரும் சென்னை மக்கள், ஒரே இடத்தில் பல்வேறு வகையான பாரம்பரிய பொம்மைகளை பார்வையிட்டு வாங்குவதற்கு இந்த கண்காட்சி வாய்ப்பாக அமைந்துள்ளது.