சென்னையில் நள்ளிரவு பைக் ரேஸ்! 50-க்கும் மேற்பட்ட இளைஞர்களால் பரபரப்பு!
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நள்ளிரவில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டு இருசக்கர வாகனங்களில் பைக் ரேஸ் மற்றும் சாகசங்களில் ஈடுபட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட பகுதியில் நள்ளிரவு நேரத்தில் இளைஞர்கள் குழுவாக திரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி சாகசங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அதிவேகமாக வாகனங்களை இயக்குவது, சாகசங்களில் ஈடுபடுவது உள்ளிட்ட செயல்களால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறும் அச்சமும் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நள்ளிரவு நேரத்தில் சாலையில் இதுபோன்ற சாகசங்கள் நடைபெற்றதால், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்து அப்பகுதியினர் கவலை தெரிவித்துள்ளனர். பைக் ரேஸ் மற்றும் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே, சென்னையில் நள்ளிரவு நேரங்களில் பைக் ரேஸ் மற்றும் ஆபத்தான சாகசங்களில் ஈடுபடுவதைத் தடுக்க போலீசார் கண்காணிப்பு மற்றும் வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்தி வருகின்றனர். சமீபத்திய சம்பவங்களில் விதிகளை மீறி பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பொதுமக்கள் மற்றும் பிற வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் பைக் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
