தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சென்னை மாணவி ஹேனா ஜரின் 3 பதக்கங்களைக் குவித்து சாதனை!
தேசிய பள்ளிகளுக்கு இடையிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் சென்னை மாணவி ஹேனா ஜரின் தங்கம், வெள்ளி, வெண்கலம் என 3 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.
சி.ஐ.எஸ்.சி.இ. பள்ளிகளுக்கு இடையிலான 7-வது தேசிய ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்றது. இதில் சென்னை அடையாறில் உள்ள செயின்ட் மைக்கேல் பள்ளியில் படிக்கும் மாணவி ஹேனா ஜரின் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.
போட்டியின் டேபிள் வால்ட் பிரிவில் ஹேனா ஜரின் தங்கப்பதக்கத்தை வென்றார். பேலன்ஸ் பீம் பிரிவில் வெள்ளிப்பதக்கமும், புளோர் எக்சர்சைஸ் பிரிவில் வெண்கலப்பதக்கமும் கைப்பற்றினார். இதன் மூலம் ஒரே போட்டியில் மூன்று பதக்கங்களை வென்று சென்னை பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இந்தச் சாதனையின் மூலம், இந்திய பள்ளி விளையாட்டு சம்மேளனம் சார்பில் நடைபெறும் தேசியப் போட்டியில் பங்கேற்கவும் ஹேனா ஜரின் தேர்வாகியுள்ளார்.
சிறு வயதிலேயே ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டில் திறமையை வெளிப்படுத்தி வரும் ஹேனா ஜரினின் இந்த வெற்றி, சென்னை மாணவர்களின் விளையாட்டுத் திறனை மீண்டும் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது.
