சேப்பாக்கத்தில் CSK-வை வீழ்த்திய பஞ்சாப் - சென்னை அணிக்குத் தொடர் தோல்வி... ரசிகர்கள் ஏமாற்றம்!
நடப்பு ஐபிஎல் தொடரின் முக்கியமான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் நேற்று மோதின. சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யும் முனைப்பில் களம் இறங்கிய சென்னை அணிக்கு, பஞ்சாப் அணியின் அதிரடி ஆட்டம் முற்றுப்புள்ளி வைத்தது.
முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 209 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களின் சிறப்பான ஆட்டத்தால் சவாலான இலக்கை பஞ்சாப் அணிக்குச் சென்னை நிர்ணயித்தது. 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணிக்கு, தொடக்க வீரர்களே அதிரடி காட்டினர்.

இம்பேக்ட் சப் வீரராகக் களம் புகுந்த பிரியான்ஷ் ஆர்யா, சென்னை பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். வெறும் 11 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் குவித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். மற்றொரு தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் தனது பங்கிற்குப் பவுண்டரிகளை விளாசி ரன் வேகத்தைக் குறையாமல் பார்த்துக் கொண்டார்.
சென்னை அணியின் பந்துவீச்சாளர்களான கலீல் அகமது, ஹென்றி மற்றும் கம்போஜ் ஆகியோர் ரன்களை வாரி வழங்கினர். முதல் 3 ஓவர்களிலேயே பஞ்சாப் அணி 40 ரன்களுக்கு மேல் குவித்து வலுவான நிலையில் இருந்தது. ஹென்றி ஒரு விக்கெட்டை வீழ்த்தினாலும், ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் சென்னை பந்துவீச்சாளர்கள் திணறினர்.

இறுதிவரை அதிரடியைத் தொடர்ந்த பஞ்சாப் கிங்ஸ் அணி, 18.4 ஓவர்களிலேயே 5 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி பஞ்சாப் அணி புள்ளிகள் பட்டியலில் முன்னேறியுள்ளது.
முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி கண்ட சென்னை சூப்பர் கிங்ஸ், தற்போது பஞ்சாப்பிடமும் தோற்றுப் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திலேயே நீடிக்கிறது. இது சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
