செம... சென்னை டூ பெங்களூரு புல்லட் ரயில்!!

 
புல்லட் ரயில்

பொதுப்போக்குவரத்தை பொறுத்தமட்டில் பொதுமக்கள் பெரும்பாலும் பேருந்து பயணங்களை காட்டிலும் ரயில் பயணங்களையே விரும்புகின்றனர். குறைவான செலவில் வேகமான பாதுகாப்பான பயணம் தான் இதற்கு காரணம். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் காரணமாக பலருக்கும் இந்த போக்குவரத்தில் அவ்வளவாக விருப்பம் இருப்பதில்லை. 
சாலைகளைக் காட்டிலும் ரயில்களில் ஒன்றிய அரசு அதிக முதலீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை இருந்து கொண்டே தான் இருக்கிறது. பாதுகாப்பானது, பயணிகளுக்கு ஆகும் செலவும் குறைவு உள்ளிட்ட காரணங்களால் ரயில்களையே மக்கள் விரும்புகின்றனர். அதன்படி தென் இந்தியாவின் முக்கிய நகரங்களான சென்னை பெங்களூர் இடையே ஏற்கனவே பல ரயில்கள் இருக்கும் நிலையில், சமீபத்தில் தான் புதிதாக வந்தே பாரத் ரயிலும் சென்னை - பெங்களூர் - மைசூர் இடையே இயக்கப்படுகிறது.

புல்லட் ரயில்

இந்த நிலையில், மும்பை டூ அகமதாபாத் வழித்தடத்தில் 508 கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்க அடித்தளம் போடப்பட்டு விட்டது. ஜப்பான் நாட்டின் நிதியுதவி உடன் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் காரணமாக கால தாமதம் ஆன நிலையில் தற்போது பிரச்சினைகள் ஓரளவுக்கு முடிந்து பணிகள் வேகமெடுத்துள்ளன. வரும் ஆகஸ்ட் 2026-ல் புல்லட் ரயில் பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு மணிக்கு 320 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கலாம்.
 
இந்தியாவின் முதல் புல்லட் ரயில் என்ற பெருமையை மும்பை - அகமதாபாத் வழித்தடம் பெறும். இதையடுத்து பிற நகரங்களிலும் விரிவுபடுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்படும். இதற்காக ஒன்றிய அரசு தற்போதே திட்டங்களை உருவாக்கி வைத்திருக்கிறது. இதுதொடர்பான விவரங்கள் நடப்பு நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பல்வேறு எம்.பிக்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலாக கிடைத்துள்ளன.

அதாவது, மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் வெளியிட்டுள்ள தகவலில், ரயில்களின் வேகத்தை கூட்டும் பணிகள் இந்திய ரயில்வே துறையால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஐஐடி மும்பையின் உதவியுடன் பேசஞ்சர் ரயில்களை எக்ஸ்பிரஸ் ரயில்களாகவும், எக்ஸ்பிரஸ் ரயில்களை சூப்பர் பாஸ்ட் சேவையாகவும் மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

அதிவேக ரயில் சேவையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் பங்கு மிகவும் முக்கியமானது. இதுவரை 25 வழித்தடங்களில் 50 வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புல்லட் ரயில் குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், தற்போது மும்பை - அகமதாபாத் அதிவேக ரயில் (MAHSR) திட்டத்தில் தொழில்நுட்ப மற்றும் களப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புல்லட் ரயில்
 
இதில் ஜப்பான் அரசு நிதியுதவி அளித்து கைகொடுத்துள்ளது. வருங்காலத்தில் தேசிய ரயில் திட்டத்தின் (National Rail Plan) கீழ் புதிதாக சில வழித்தடங்களிலும் புல்லட் ரயில்களை விட திட்டமிடப்பட்டுள்ளது. அவை, டெல்லி - வாரணாசி, டெல்லி - அகமதாபாத், மும்பை - நாக்பூர், மும்பை - ஹைதராபாத், சென்னை - மைசூரு, டெல்லி - அமிர்தசரஸ், வாரணாசி - ஹௌரா ஆகியவை ஆகும்.

இதில் சென்னை - மைசூரு வழித்தடத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவை பயன்பாட்டில் உள்ளது. இது பெங்களூரு வழியாக செல்கிறது. அதேபோல் புல்லட் ரயிலும் சென்னையில் இருந்து பெங்களூரு வழியாக மைசூரு சென்றடையும் எனத் தெரிகிறது. இந்த புல்லட் ரயில் 2051-ம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரும் வகையில் திட்டமிட்டு செயல்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. இது பயன்பாட்டிற்கு வந்தால் தென்னிந்தியாவின் முதல் புல்லட் ரயில் என்ற பெருமையை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web