குட்நியூஸ்... சென்னை டூ திருச்சிக்கு எக்ஸ்பிரஸ்வே... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன நல்ல செய்தி!
திருச்சி மொத்தமாக மாறப் போகுது. தமிழகத்தின் மத்திய பகுதி மாவட்டமாக விளங்கி வரும் திருச்சி புதுபொலிவடைந்து வருகிறது. விஸ்தாரமான மத்திய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வரும் நிலையில், புது ஆம்னி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்னும் அதிவிரைவாக பயணம் செய்யும் வகையில் எக்ஸ்பிரஸ்வே அமைக்கப்பட இருப்பதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். இதன் மூலம் திருச்சிக்கு பயண நேரம் இன்னும் குறையும்.

திருச்சி - சென்னை பசுமை வழி சாலை, திருச்சி-தஞ்சாவூர், திருச்சி - கரூர் 6 வழிச்சாலை மற்றும் திருச்சி - காரைக்குடி வரை 4 வழிச்சாலை அமைக்கப்படும் என்று மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த கூட்டத்தில் தேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.
தேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் பல்வேறு மாநிலங்களில் புதிய தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பது மற்றும் பழைய சாலைகள் புணரமைப்பது குறித்த கூட்டம் மஹாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மத்திய தேசிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.
இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கான தேசிய நெடுஞ்சாலை திட்டங்களையும் நிதின் கட்கரி அறிவித்தார். அதில் திருச்சி - சென்னை இடையே பசுமை வழிச்சாலை அமைக்கப்படும் என்றும் கூறினார். இது மட்டுமல்லாமல் திருச்சி - தஞ்சாவூர், திருச்சி - கரூர் இடையேயான தற்போதைய 2 வழிச்சாலை 6 வழிச்சாலையாக தரம் உயர்த்தப்படும் என்றும், திருச்சி - காரைக்குடி இடையே 2 வழிச்சாலை, 4 வழிச்சாலையாக அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

இதற்கான விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தற்போது இறுதி செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பசுமை விரைவுச் சாலையின் தொடக்கப் புள்ளி தீர்மானிக்கப்பட்ட நிலையில், திருச்சி வரை இருக்கும் என அமைச்சரே கூறியிருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இருந்து திருச்சி வரை செல்லும் சாலையில் அதிகரித்து வரும் வாகன நெரிசல், எதிர்கால வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் வணிக மற்றும் பிற பொருட்களின் போக்குவரத்து ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த புதிய விரைவுச் சாலை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி தினமும் சுமார் 1.6 லட்சம் வாகனங்கள் இந்த சாலை வழியாக செல்வதாக கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் மூலம் சென்னையில் இருந்து திருச்சி செல்வதற்கு இடையிலான தொலைவை வெறும் 4 மணி நேரத்தில் அடையும் விதமாக எக்ஸ்பிரஸ் ஹைவே அமைக்கப்பட உள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
