40 ஆண்டுகளாக மும்பையில் தனியாக வாழ்ந்த சென்னை பெண் மரணம்... மகள்களை தேடி உருக்கமான பதிவு!

 
லலிதா

 

மும்பையில் கடந்த 40 ஆண்டுகளாகத் தனியாக வசித்து வந்த சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு 2 மகள்கள் இருந்தும், அவர்களின் இருப்பிடம் தெரியாததால், அவர்களைத் தேடி அக்கம்பக்கத்தினர் செய்தித்தாளில் வெளியிட்ட அறிவிப்பு இணையத்தில் வைரலாகி வருகிறது.

40 ஆண்டுகளாகத் தனிமை வாழ்க்கை

சென்னையைச் சேர்ந்த லலிதா கிருஷ்ணமூர்த்தி என்பவர், மும்பையில் உள்ள குடியிருப்பு ஒன்றில் சுமார் 40 ஆண்டுகளாகத் தனியாக வசித்து வந்துள்ளார். அவருக்கு 2 மகள்கள் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், அவர்கள் தற்போது எங்கு வசிக்கிறார்கள், அவர்களை எப்படித் தொடர்புகொள்வது என்பது குறித்த விவரங்கள் யாரிடமும் இல்லை.இந்த நிலையில், கடந்த நவம்பர் 13-ம் தேதி லலிதா கிருஷ்ணமூர்த்தி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

இறுதிச்சடங்கு செய்த அக்கம்பக்கத்தினர்

லலிதாவின் இறுதிக்காலத்தில் அவரது ரத்த உறவினர்கள் யாரும் உடனிருக்கவில்லை. இதையடுத்து, அவருக்கு உறவினர்களான ஒரு தம்பதியும், அவர் வசித்து வந்த குடியிருப்பின் அக்கம்பக்கத்தினரும் இணைந்து இறுதிச்சடங்குகளைச் செய்து முடித்தனர்.

மகள்களைத் தேடி செய்தித்தாளில் அறிவிப்பு

லலிதாவின் மறைவு குறித்து அவரது 2 மகள்களுக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும் தெரிவிக்கும் நோக்கில் செய்தித்தாளில் பொது அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. உஷா லட்சுமிநாராயணன் மற்றும் பவன் ஷெட்டி ஆகியோரின் தொடர்பு எண்களும் அதில் இடம்பெற்றிருந்தன.

வைரலான உருக்கமான பதிவு

இந்த அறிவிப்பைப் பார்த்த நிதித்துறை வல்லுநர் கிஷோர் சுப்பிரமணியன், அதில் குறிப்பிடப்பட்டிருந்த பவன் ஷெட்டியைத் தொடர்புகொண்டு பேசினார். அப்போது லலிதா சுமார் 40 ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்தது உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொண்டார்.இதையடுத்து, “அம்மாவுக்கு பிரியாவிடை சொல்லக் கூட ஒரு குரல் இல்லை” என்ற உருக்கமான தலைப்பில் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

இந்தப் பதிவு இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. முதியோர் தனிமை, குடும்ப உறவுகளின் முக்கியத்துவம் மற்றும் வயதான பெற்றோரின் பராமரிப்பு குறித்து இந்தச் சம்பவம் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.