சோகம்... சரக்கு வேன் மோதி 4 வயது சிறுவன் பலி!
சென்னையை அடுத்த போரூர் அருகே அதிகாலையில் அரங்கேறிய கோர விபத்தில், 4 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். அவனது தாய் மற்றும் 5 மாதக் குழந்தை படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (30), தனது மனைவி குளோரி (28) மற்றும் 4 வயது மகன் ரியான் பெலிக்ஸுடன் வசித்து வந்தார். தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தங்களது சொந்த ஊரான சிவகங்கைக்குச் சென்று வாக்களித்துவிட்டு, உறவினர்களான கிருபா, ஜெர்லின், டேனியல் மற்றும் அவர்களது 5 மாதக் குழந்தையுடன் இன்று அதிகாலை சென்னைக்குத் திரும்பினர்.
போரூர் அருகே உள்ள சுங்கச்சாவடியில் பேருந்திலிருந்து இறங்கிய இவர்கள், சாலையைக் கடக்க முயன்றனர்.அப்போது கோயம்பேட்டிலிருந்து பூக்களை ஏற்றிக்கொண்டு தாம்பரம் நோக்கி அதிவேகமாகச் சென்ற சரக்கு வேன் ஒன்று, எதிர்பாராத விதமாக அவர்கள் மீது பயங்கரமாக மோதியது.இந்த விபத்தில் 4 வயது சிறுவன் ரியான் பெலிக்ஸ், அவனது தாய் குளோரி மற்றும் 5 மாதக் குழந்தை ஜீவன் புவனேஷ் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர்.
விபத்து நடந்தவுடன் அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், சிறுவன் ரியான் பெலிக்ஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மற்ற 4 பேர் நூலிழையில் உயிர் தப்பினர். வாக்களித்துவிட்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய குடும்பத்தில், அதிகாலையில் நடந்த இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான வேன் டிரைவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
